மடியில் முகம் புதைத்த

மகளின் தலை வருடி

ஒன்றன் பின் ஒன்றாக

அம்மா கேட்டாள்

 

நேர்த்தியான ஆடைகளையே

மூலதனமாக அணிந்து

அலைந்து கொண்டிருக்கிறானா

அழகன் ஒருவன்?

 

பீய்ச்சியடிக்கப்பட்ட

வாசனைத் திரவங்கள்

வீச்சமெடுக்க

நெருங்கி வந்து நிற்கிறானா

மற்றொருவன்?

 

காதல் கருணை கோரி

ஜாடைமாடையாக

பாடிக் கொண்டிருக்கிறானா

பாடகன் ஒருவன்?

 

வாகனத்தில் வந்து

வேகமெடுத்து

வித்தை காட்டுவதே

வேலையாக இருக்கிறதல்லவா

வீரன் ஒருவனுக்கு?

 

உதவிகள் செய்வதையே

உப தொழிலாக செய்வானே

உபகாரி ஒருவன்?

 

கண்டிப்பாய்

சிலரேனும்

கவிஞர்களாகியிருப்பார்களே?

 

தாத்தா வழியாக

தனக்கு வந்த சேர்ந்த

சொத்து விவரங்களையெல்லாம்

சொல்லி நிமிர்ந்தானல்லவா

செல்வந்தனொருவன்?

 

என்னைத் தவிர

எவனோடும்

பேசாதே என்று

பெருந்தன்மையாளனொருவன்

பாத்திக்கட்டினானல்லவா?

 

மாய்த்துக்கொள்ள

நினைப்பதாக

மறை கழன்ற ஒருவன்

மடல் எழுதி இருப்பானே?

 

ஆசிட் வீசப்போவதாக

அருங்குணன் ஒருவன்

அறிவித்திருப்பானே மகளே?

 

வியப்போடு தலையை உயர்த்தி

பெற்றவளைப் பார்த்து

பிறந்தவள் கேட்டாள்,

 

இப்படியெல்லாம்

எனக்கு நேர்வது

உனக்கு எப்படி

தெரியும் தாயே?

 

அமைதியாக

அம்மா சொன்னாள்-

இவன்களது

அப்பன்களைக் கடந்தே

உன் அப்பனுக்கு

மனைவியானேன் மகளே

- ஜெயபாஸ்கரன்

Pin It