வெளியே மழை
உள்ளே புழுக்கமென
எட்டுக்கும் பத்துக்கும் இடையில்
அல்லாடும்
உயிர்ப்பின் ஊஞ்சலிது
ஒரு நாளின் இரண்டு பங்கும்
இப்படித்தான்
நெருக்குதலுக்குள்
அறுந்து விழும் அபாயத்துடன்
ஆயுள் கயிற்றில் ஆடியபடி

கால்களை எத்தனை அவதானமாய்
முன் வைத்தாலும்
வழுக்கி விடும் படிக்கட்டுகள்
ஒவ்வொரு இடத்திலும் இருந்து விடுகின்றன

தற்காலிகமாய் தொடங்கி
நிரந்தரமாய்ப்போன
ஒன்றித்திருக்கும் அறை
ஒரு சவப்பெட்டியை ஞாபத்தில் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறது

கதவினை திறக்கும்போது
ஒரு மூலை பூனையாய் ஒளிந்து கொள்வதுபோல்
கதவினை சாத்தும்போது
ஒரு தனிமை பூதமாய் வெளியே வருகிறது
பூட்டை முன்னால் விட்டு
சாவியைப் பின்னால் வைக்கிறது
பீதியில் உறைய வைக்கும் இரவுகள்

நெருக்கடி அறியாமல்
கடிகாரத்தின் முட்கள்
காலக் குதிரையின் கடிவாளமாய்
வயதைப் பிணைத்துக் கொண்டு
தாவிப் பாய்கிறது அந்திமத் தெரு நோக்கி

இடையில் மரணம் பெரும் மதகை
வெட்டி வைத்திருக்கிறது
வீழ்த்தி விடுமெனும் சூத்திரம் சூட்சுமமாய் தெரிந்தாலும்
யாருக்கும் பெரிதாய்
எச்சலனத்ததையும்
ஏற்படுத்தி விடுவதில்லை.

- ரோஷான் ஏ.ஜிப்ரி

Pin It