hospital bed

நோயாளிப் படுக்கையில் அதிகாரத்தின்
பிராணியை கட்டி வைத்திருக்கிறேன்
சுற்றி கூட்டமில்லாததால் இப்பிராணி
சிறிது நேரத்தில் இறந்து விடும்
இரத்தக் கொதிப்புக்கு அகங்கார மாமிசத்தை
விருந்தாக்கியிருந்ததை தனிமை
நினைவு குறிப்புகளிலிருந்து காட்டிக் கொண்டிருக்கிறது
சர்க்கரையில் கரைந்தது திமிர் என்றாலும்
உடல் பருமனெனும் பன்றியைக் கொழுக்க
வைக்கப் பிசுபிசுவென்ற நச்சுத்தன்மையை
சுவைத்துக் கொண்டிருந்தேன்
இன்சுலினை தினம் பரிசளித்துக்
கொண்டிருந்தனர் விசவாசிகள்
கால் பிடிப்பு கைப் பிடிப்பு உடல் பிடிப்பில்
துடித்துக் கொண்டிருந்த போது கூட
பொன் நகை மதிப்பை கணித்துக் கொண்டிருந்தது
மமதையெனும் சாத்தான்
வயது கூடக் கூடக் குறைத்து காட்டிக் கொண்டிருந்தது
அழகெனும் அழுகிய புழு
இத்தனையையும் கட்டி மேய்த்தது பணமெனும் பாதள மிருகம்
சிறுநீரும் மலமும் அள்ளும் ரோபோவை
தேடிக் கொண்டிருக்கும் போதே
உடல் பலூன் வெடித்து விட்டது
பணத்துக்குப் புண்ணியம் கிடைக்கவேயில்லை
பண்ட மாற்றம் போலில்லையாம் பாவம்
உடை மாற்றலுக்கும் அறுவை சிகிச்சைக்குமே
மொத்த தைரியமும் துகிலுரிந்து விட்டது
பாடுபட்டு சேர்த்த பட்டுடைகளையும்
ரொக்கத்தையும் நிலத்தையும்
பாம்பாகச் சுற்றியிருந்த மனம்
விடுபட்டு தலை வருடும் உயிரின் தடத்தில்தான்
தன்னம்பிக்கை துளிர் விடத் தொடங்கியது
இனி வரும் காலங்களில் நோயாளியின்
படுக்கைதான் போதிமரமாகப் போகிறது...

- சீதா

Pin It