மழைக்கும் மழைக்குமான இடைவெளியில்
இடைவேளையாகிறது
எதிர் வீட்டுக்கு ஓடி சென்று
மிளகா பஜ்ஜி கொடுத்துவிட்டு
திரும்ப ஓடி வரும்
உன் கொலுசொலி...

*

பெரு மழைக்கு காத்திருக்கும்
ஊர் நடுவே
உன் ஊர் மழைக்கு
காத்திருக்கும் உலகம் நான்....

*

துளிகளால் மழையாவது இருக்கட்டும்
உன் விழிகளால் ஆவதில் இருக்கிறது
மழை....

*

மழை வந்ததும் ஓடி
வாசல் வரும் உன்னோடு
இன்றும் தொலையத்தான்
காத்திருக்கிறது என் வான வண்ணக் குடை....

*

உன் வீட்டு மொட்டைமாடியில் மட்டும்
பாலுமகேந்திராவின்
ஊட்டி மழை...

*

ஒன்று பாட்டு பாடுவாய்
அல்லது காஃபி போடுவாய்
குறைந்த பட்சம் ஏழெட்டு முத்தங்களாவது
தருவாய்
மழை வரும் நாளில் மதம் பிடிக்கிறது
உனக்கு...

*

மாயநதி
மழையாகி இருக்கிறது
நீ திறந்து மூடும் கதவிடுக்கில்...

*

பாதி மழையோடு நிறைவு
செய்கிறேன்....
மீதி மழைக்கு நீ வா...

*

மழை நடுவே சிறு வெயில் நீ
சிறு வெயிலெல்லாம் மழையாகும்
இனி...

*

கூந்தலில் மேகம் வீசியபடி
சென்று கொண்டிருக்கிறாய்
முளைத்து நிற்கிறது என் வாசலெங்கும்
முதல் மழை....

*

பெரும் சாரலுக்கு கெண்டைக்கால்
தெரிய நசநசத்தும் நடுங்கிக் கொண்டும்
எனைப் பார்த்து
ஸ்ஸ்ஸ்........ என்று உதடுபடாமல்
ஒலி எழுப்புவாயே .....
இனி வந்த மழையெல்லாம்
நானானேன் போ.....

- கவிஜி

Pin It