சிவன் ராசி மாறி வரும் நாளென்று
தனக்குரிய ராசியின் பலனறிய காத்திருந்த பக்தர்கள்
விபூதி கமழும் கோயிலின் உள்பிரகாரத்தில்
ஒரு சாதகமான மாற்றத்துக்காக
நாள் முழுக்க வேண்டிக்கொண்டிருந்தனர்.

ஞாயிற்றின் முற்பகலை
தலை சாய்ந்த ஏசு கிறித்துவின்
துயர் கசியும் கண்களில் பார்க்கச் சென்றவர்கள்
கையிலிருந்த வேதாகமத்தைப் படித்தபடி மன்றாடினர்.
கைவிடுவதில்லை என்னும் வார்த்தையை
கார்த்தரே நேரில் சொல்ல கேட்கத் துடித்தது மனம்.

நாளின் கடைசித் தொழுகை முடிந்த பிறகு
மசூதியின் மேலே பிறை மிதப்பதைப் பார்த்தவர்கள்
நபியின் அருவத்திற்கு முன் வாசிக்கப்பட்ட
புனித குர்ரானை மீண்டும் உச்சரித்தனர்.
உச்ச தொனியில் எழுந்தடங்கியிருந்த குரல்
நேயமே நாயகம் என்று பிரதிபலித்தது.

இப்படியாக
வேண்டுதல்களாலும் மன்றாடுதல்களாலும் இறைஞ்சுதல்களாலும்
இறையிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டன
மனித ஆன்மாக்கள்.
இதில் எங்கிருக்கக் கூடும்
இனம் அமைதியை இழக்கும் மத துவேசம்?

- மௌனன் யாத்ரீகா

Pin It