ஏதோ
இந்த உள்ளமெங்கும்
புதியதாய் வீதிகள்
நீளத் துவங்கின
அங்கே
மனிதத் தடங்கள்
இரவையும் பகலையும்
ஓட ஓட விரட்டின
எல்லாமும் அடங்கியபின்
உலகம் சுழல்வதைப்
பொய்யென்று நிறுத்தும்
ஒரு குற்றத்தில்
வழிந்தோடும் குருதியில்
மொய்க்கும் ஈக்களின் சுருதியில்
ஆண் பெண்ணுக்கான
தொடர்பு மட்டும்
உறைந்து கிடக்கின்றது....

காதலென்றால்
சற்று சாத்திரம் மெல்ல
வாய்ப்புண்டு
காமமென்றால் அதற்கு
சரித்திரத்தில்
நிச்சயம் இடமுண்டு....

ஒரு கையில் பாரதியும்
இன்னொரு கையில்
ஈசனும்
விரல்களாய் நீண்ட பொழுது
அவசரத்தில்
தேரும் எழுத்தாணியும்
உடன் வந்த பவனி
கவனிக்கப்படவில்லை.....

சட்டென்று
ஒருவர் முகத்தை
மற்றொருவர் வியக்கும் போது
அவர்களுக்குள்
கிளிகளும் மந்திரவாதிகளும்
இரண்டடி இடைவெளியைத்
தாண்டி வந்திருப்பர்.....

எத்தகு சூழலிலும்
கனவில்
ஆண்கள் கூட்டமென்று
கண்டு
அஞ்சி ஓடும் மூளைக்குக்
கனவென்று சொல்லவும்
விழித்துப் பார்க்க வேண்டும்
அத்தகு கயவன்
யாராகினும்
இங்கிருக்கும் பாதையில்
அரிசி வாங்கிக்
கடப்பவனாகினும் உண்டு......

உயிரென்ன உடலென்ன
மனமென்ன உறவென்ன
தலைக்கவசம் அணிவரே
குற்றமற்றவர்
தப்பித்தவர் நடைபயணி தானே...!

- புலமி

Pin It