ஒரு குழந்தை
சாலையைக் கடக்க
உதவக் கோரினால்
சட்டென்று செயல்படாதீர்கள்!

00

சிறுமலரை
உள்ளங்கையில் வைத்து
விரல்களைக் குவித்து
மூடித் திறக்கையில்
இதழ்கள் கசங்கவில்லை
என்றால் மட்டுமே
அதன் கரங்களைப் பற்றுங்கள்!

00

கடக்கும்போது
எதிர்புறத்தை அடைவதில்
அவசரம் காட்டாதீர்கள்
வாகனத்தில் வருபவர்களையும்
காத்திருக்கச் சொல்லுங்கள்!

00

மறுமுனையை அடைந்ததும்
'இனி நீயாகப் போய்விடு'
என்று சொல்லி
கிளம்பிவிடாதீர்கள்
பள்ளிவரையோ
வீடுவரையோ அழைத்தால்
போய்வாருங்கள்...

00

அலுவலகத்திற்கு
நேரமாகிவிட்டதாகவோ
இதர வேலைகள் இருப்பதாகவோ
துளியும்
காட்டிக்கொள்ளாதீர்கள்
எவ்வளவு நேரமானாலும்
விடைபெறும் முடிவை
குழந்தையிடமே விட்டுவிடுங்கள்.

00

உங்கள் வயதை
அனுபவத்தை
முடியும்வரை குறைந்துவிடுங்கள்
உலகத் தொடர்பிலிருந்து
முற்றாகத் துண்டித்துக்கொள்ளுங்கள்
அதற்குத் தெரிந்த கதைகளை
அதன் மொழியில்
அப்படியே சொல்லவிடுங்கள்
இடையிடையே
'ம்ம்...ம்ம்...' எனச் சொல்லுங்கள்.

00

விண்மீன்கள்தான் தனக்கு
விளையாட்டுப் பொருட்கள்
எனச் சொன்னால்
உடைந்த அல்லது
பழையதாய் ஒன்றை
அதனிடமிருந்து
கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்!

00

சில முத்தங்களைக் கொடுத்தால்
எச்சிலைத் துடைத்து விடாதீர்கள்
காய்வதற்குள் வீடுவந்து
நாட்குறிப்பில்
'சொர்க்கத்தைச் சுகித்த
தினம்' என மறக்காமல்
குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! 

- நாவிஷ் செந்தில்குமார்

Pin It