அப்பா இறந்த அவசரத்திற்கும்
அமெரிக்காவிலிருந்து
வரமுடியாத மூத்தமகன்
ஸ்கைப்பின் வழி,
கைபேசிக் கண்ணாடியில்
கண்ணீர் விட்டிருந்தான்

நேரில் வந்திருந்த சின்னமகனோ
குளிர் சவப்பெட்டியின்
கண்ணாடியில்
தன் கண்ணீரைத் துடைத்திருந்தான்

தன் குழந்தையின்
பள்ளி இறுதித் தேர்வால்
சாவுக்கு வரமுடியாத
வட மாநிலக் குடியேற்ற மகள்
அப்பாவின் நிழற்படமொன்றின்
கண்ணாடியில் தான்
கண்ணீர் வி்ட்டுத் தீர்த்தாள்

தொழில்நுட்பப் பேருதவியில்
எல்லா உணர்வுகளையும்
ஏற்கப் பழகியிருந்தன
கண்ணாடித் துண்டுகள்....

கடவுள் அதிரப் பிச்சை

கோவில் வாசல்களில்
மடியேந்தி நிற்பவர்களுக்குப்
பிச்சையிடுவதில்
உடனடிப் பலன்
கிடைப்பதேயில்லை
பாத்திரங்கள் எனில்,
கடவுளுக்குக் கேட்கும் வண்ணம்
அதிர்வாகப் பிச்சையிட முடிகிறது.

- இரா.ரவிக்குமார்

Pin It