மழையில்
நடுங்கிக் கொண்டிருந்த
முயல் ஒன்றின் மேல்
என் குடையை
வைத்து மூடினேன்...
குடையை
நெட்டித் தள்ளிவிட்டு
மீண்டும் மழைக்கு
நகர்ந்து கொண்டது முயல்...

***

சின்னச் சின்ன
ஊசி இலைகளுக்குள்
ஒளிந்து கொண்டிருந்த
சில புகைப்படங்கள்,
கடைசி வரையில்
ஒளிந்து கொண்டு மட்டுமே
இருந்து விடட்டுமென்று
நினைத்துத்
திரும்பி வந்து விட்டேன்...

***

மேல்புறத்தை மட்டும்
கிழித்துச் செல்ல
ஆற்று நீருக்குள்
விட்டெரிந்த கல்நுனி மோதி
உயிர் துடித்துக் கொண்டிருந்தது
நேற்று நான்
இரை தூவிக் கொண்டிருந்த
அந்த
செதில்கள் சிவந்த மீன்...

***

தனித்துக் கிடந்த
அந்தத் தூண்டிலுக்கு
அருகிலிருந்து
வேக வேகமாய்
நகர்ந்து கொண்டிருந்தது
மீனிடம் இருந்து
தப்பித்துக் கொண்ட
புழுவொன்று...

***

பிளந்து சிதறிய வேர்களுக்குள்
வண்ணங்கள் ஒளித்து வைத்த
சிற்பங்கள் உண்டெனில்
எனக்குச்
சிற்பங்கள் தேவையில்லை
வேர்கள் போதும்...

***

- கிருத்திகா தாஸ்

Pin It