boy 250இஸங்களின் கேள்விகள்
திரியும் தெருவிற்குள்
ஒரு பூந்தொட்டியை ஏந்தியவாறு
நுழைகிறான்
இஸங்களைப் பற்றி அறியா சிறுவன்!

அவன் கையில் இருந்த
இன்னும் பூக்காத செடியின்
பூக்கள் மொக்கின் உள்ளே
நடுங்கியவாறே
பூக்க எத்தனித்திருந்தன

கேள்விகளில் ஒன்றின்
கழுத்தை திருகியவாறே
சிறுவனை முறைக்கிறான்
இஸத்தின் கேள்விக்கு
பதிலில்லாதவன்

காலையில் ஊற்றிய நீரின்
ஈரம் தோய்ந்த தொட்டியின் மண்
அவன் மீது உமிழ்ந்து
தன்னைத் தானே இன்னும்
ஈரமாக்கிக் கொண்டது

கேள்விகளின் ஒலி
தேனீக் கூட்டத்தின் இரைச்சலாக
பரவிக் கொண்டிருந்த போது
சிறுவனின் கண்கள்
இலைகளின் மீது கண்ணீர் ஊற்றியது

எதிரே வீசிய திடீர்
சூறாவளியில் அடித்துச் செல்லப்பட்ட
கேள்விகளில் சில
இன்னும் தரையில் அசைவற்றுக்
கிடந்தன

அழுது கொண்டே
தெருவைக் கடந்த அவனின்
நெற்றியுரசி தலைகோதிய
தென்றல் பட்டு சிரித்த மொக்கு
பூத்திருந்தது

- குமரகுரு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It