எரிகற்கள்
சுண்டிய ரத்தமாக
சூரிய உதயத்திற்குப் பின்
வருவதை
எவரும் கண்டிருப்பாரோ?

பதுங்கு குழிகளில்
அருகாமையில்
சிறகொடிந்து வழியற்று
கொத்துக் கொத்தாக மரணித்த ஈசல்கள் போன்று
பிணக்குவியலுக்குள்
இரத்தச் சேற்றில்
மரணத்தைப் பெருவெளியில் விதைத்துக் கொண்டிருந்த
மனிதர்கள் கண்டார்கள்

சிகை எரிந்த
குடல் சரிந்த
சதை தொலைந்த
சிதையில்
குண்டுகள் துளைத்தது போக
எஞ்சியவையில்
எவையும் அடையாளமற்று
பதுங்கு குழிகளுக்கருகில்
ஓர் ஓநாயொன்றின் பிளிறலில்
வெளியெங்கும்
இரத்தச் சாட்சியை விட்டகன்றார்கள்.

விக்கிரமாதித்தனின் வேதாளக் கதையை
நம்பும் இவ்வுலகம்
பனை ஓலை உரைக்கும்
ஆத்திச் சூடியை
சிறு நரியின் கழுத்தில்
தற்கொலையுண்ட துண்டால்,
பயங்கரவாதம் என்னும் சொற்களால்
சிலுவையில் அறைந்ததை
தேநீர்ச் செடிகள்
குருதியைக் குடித்துத் தோய்ந்த இலைகளின்
ஆவி பறக்கும் சாற்றை
கண்ணாடிக் குவளையால்
பருகிக் கொண்டே
கரவொலியோடு நகையாடுகிறார்கள்
மனிதத்துவம் பேசும் கோமான்கள்.

குருதி உறைந்த செந்நிலம்
கால்களற்றப் பனையும்
நூறாயிரம் கதைகள் தாங்கி
சொல்ல மொழியறியாது
சிறு காற்றும் வீசாத வேளையில்
வானெங்கும் பெரும் இரைச்சலோடு
கிளைகளைப் பரப்புகின்றது.

- செல்வா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It