சொந்த வயல் தந்த நெல்லை
பொங்கலாகி உண்டுவிட்டு
பண்டிகை நாட்களின்
நீளக்குறைவை சிந்தையில் வைத்தபடியே
பெருநகர பிழைப்பின் மற்றுமொரு
அத்தியாயத்தை
வேண்டாவெறுப்பாய் எழுத
கிளம்பி விட்டேன்

நகரத்தை நோக்கி
நகரத் தொடங்கியது பேருந்து
முன்பகுதி இருக்கைகாரர்
தனக்கு பிடித்த படம் போடச்சொல்லி
விவாதிக்கிறார்

வாந்தி வருமென காரணம்
சொல்லி ஜன்னலோர இருக்கை
கேட்டு வாங்கியவர்
பாக்கு நிரம்பிய  வாயை
ஜன்னல் கம்பிக்குள் நுழைக்கிறார்

நவநாகரீக மங்கை ஒருத்தி
மொழியே அறியா குழந்தையிடம்
தன் ஆங்கிலப் புலமையை
கடைவிரிக்கிறார்

நான்
ஜன்னலோரம்
கடந்து செல்லும் மரங்களில்
முதலில் ஐம்பது வருவது
புளியமரமா வேப்பமரமா
என விளையாடத் தொடங்கினேன்
பேருந்து கடந்து வந்த
பாலங்களுக்கு அடியில்
மரித்து போன
விளைநிலங்களின் எண்ணிக்கை
நூறைத் தாண்டியதை
அறியாமல்!

- நெல்லை முத்துராஜா

Pin It