பூட்டியே கிடக்கிறது மனம்
 மௌனத்தை கடலளவு பெருக்கி
 உன் அறை முழுவதும்
 நிரப்பி வைத்திருக்கிறாய்

 என்
 எந்தக் கேள்விக்கும்
 பதில் கிடைக்காததால்
 அவை தளர்ந்து வீழ்கின்றன

 தழைக்கின்ற
 எல்லா ஆசைகளையும்
 பரசுராம கோபத்துடன்
 வெட்டிச் சாய்க்க
 உன்னால் எப்படி முடிகிறது?

 உன்
 வண்ணங்கள்
 எதையும் நீ பயன்படுத்தாமல்
 அப்படியே
 போட்டு வைத்திருக்கிறாய்
 மாறாக
 வாழ்க்கையின்
 பிரம்மாண்ட சுவர்களுக்கு
 வெண்மைக்குப் பதிலியாய்
 கருமை அடித்து
 ஓய்ந்திருக்கின்றன உன் கைகள்!

 வைத்த புள்ளிகளுக்குச்
 சம்மந்தமே இல்லாமல்
 கோலம் போட்டதால்
 அது
 கோணிக்கோணி உருக்குலைந்துவிட்டது
 நிலவு பெரிய பெருக்கல் குறி சுமந்து
 வானத்திலிருந்தே தகுதி நீக்கம் செய்யப்பட்டதன்
 அடையாளமாய் நிற்கிறது.

- ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Pin It