அலங்காரங்கள் ஏதுமற்று
அழுக்காய் இருந்தார் அந்தக் கடவுள்
வீதியில் வீசி எறியப்பட்ட
ஒரு பழைய பொம்மையைப் போல.

அவருக்கு
உடை மாற்றவோ
வேளைக்கு உணவு தரவோ
யாருமில்லை அந்தப் ப்ராந்தியத்தில்.

அருள் பாலிக்கும்
அழகான முத்திரைகள் தம்மிடமிருந்தும்
அருள் கேட்டு
ஏன் எவனும் தன்னிடம் வரவில்லை
என்பது கேள்வியாயும் பெரும் தவிப்பாயுமிருந்தது அவருக்கு.

கும்மிருட்டுக்கும் குருட்டு வவ்வால்களுக்குமிடையே
ஒட்டடை உடல் சுற்றியிருக்க
எப்போதும் அச்சத்துடன் தனித்திருந்தார் அந்தக் கடவுள்.

இரவுகளில்
திருடர்களும் சமூக விரோதிகளும்
அவர் இடத்தை ஆக்கிரமித்துவிட
தீர்க்க முடியாத தீட்டுக்களால்
நிலை குலைந்து போயிருந்தார் அந்தக் கடவுள்.

பாம்புகளும் பயங்கர விஷ ஜந்துக்களும்
கோபத்தில் அவரைக் கடித்துவிட
விஷமேறி..நிறம் மாறியிருந்தார் அந்தக் கடவுள்.

அவர் இருந்த ஊரில்
தற்கொலை செய்து கொண்ட ஆவிகள்
சுற்றிவரும் கதைகள் உலவி வர..
காற்றின் சலசலப்பிற்கெல்லாம் வியர்த்துப் போனார்
அந்தக் கடவுள்.

தான் உதித்த நேரம் குறித்து
யாரோ ப்ரசன்னம் பார்த்ததிலிருந்து
கட்டங்களை வெறுக்கத் துவங்கினார் அந்தக் கடவுள்.

பக்கத்துப் பெரிய கடவுள்களுக்கெல்லாம்
கிடைக்கும் மரியாதையில்
பொறாமை பொங்கி வர..இயலாமையில்..
புன்னகைப்பதை நிறுத்திக் கொண்டார் அந்தக் கடவுள்.

வழியில் செல்பவனின்..
கனவுகளில் தோன்றி
தனக்கு வாழ்வளிக்கும் படி உத்தரவிட
அவனோ
“இலவசங்களில் வாழும் தனக்கேது அருகதை?”
என நழுவிவிட
பலப்பல ஆண்டுகளாய்
தான் படும் அவஸ்தையை எவன் தீர்ப்பான்
எனத் தெரியாமல்
இரவெல்லாம் அழுது தீர்த்தார் அந்தக் கடவுள்.

பின்
பல நாட்கள் யோசித்து
தன் பீடத்தின் கீழாய்
பெரும் புதையல் ஒன்று இருக்கும்
வதந்தியை அவர் இன்று உலா வரச் செய்ய
நாளை முதல்
வளமாகக் கூடும் வாழ்க்கை
கண்ணீரோடு திரிந்த கடவுளுக்கு.

Pin It