நிஜத்தின் உடலில் வாழ்ந்து கொண்டிருந்தவன்
ஒரு நாள் பொய்யின் உடலில் நுழைந்து பார்த்தான்
கைத்தட்டல் ஒலிகளும் கட் அவுட்டுகளும்
பிரமித்துப்போனான்
அவனுக்கு எப்போதும் சாமரம் வீச பெண்கள்
துதிப்பாட சேவகர்கள் வேலையாட்கள்
தொண்டர் படைகள் எல்லாம் தயாராயிருந்தன
எந்த தெருவில் நுழைந்தாலும் அங்கே அவனுக்கு ஆரத்திகளும்
பூரணகும்ப மரியாதையும் இருந்தது
அழகான பெண் ஒருத்தி காத்துக்கொண்டிருந்தாள்
அவன் களைப்பு தீர்ப்பதற்கு
பெண்கள் என் கண்கள் என்று அவன் ஒரு முறை சொல்லியிருந்ததை
மக்கள் நினைவு வைத்திருந்ததனால்
அவன் பெண்ணை விரும்ப மாட்டானென பேசிக்கொண்டார்கள்
எதிரே வந்து போகும் அழகு அவனை இம்சித்தது
விதவிதமான ஆடைகள் அவனுக்கு கொடுக்கப்பட்டது
ஆனால் அவன் நிர்வணமாயிருக்க ஆசைப்பட்டான்
வெளிச்சத்திலிருந்து ஒதுங்கி இருட்டைத் தேடினான்
சத்தங்களிலிருந்து விலகி ஆளரவமற்ற பகுதியை நாடினான்
பொய்யின் உடலிலிருந்து வெளியே வந்து
நிஜத்திற்குள் போக விருப்பம் தெரிவித்தான்
பொய் விலகி சென்று
நிஜம் அவனை அணிந்துக்கொண்டவுடன்
அவன் மனைவியின் குரல் கேட்டது
அழகான பெண்ணை தொலைத்த சோகத்தில்
கழற்றிப்போட்ட பொய்யைத் தேடினான்
அந்தப் பொய் இன்னொருவனை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டது
அதே பொய் மீண்டும் கிடைக்கப்போவதில்லை
அதே மாதிரியான பொய்யொன்றில் நுழைந்தவன்
சீக்கிரமே வெளியேறிவிட்டான்
எல்லா பொய்களும் அவனுக்கானவையல்ல

Pin It