சாவுக்களைப் பீடித்த

அந்தத்தெருவில் இருந்து

வீசிக்கொண்டிருக்கிறது

பத்தியின் மணம்.

ஒரு வீட்டின் கூடத்தில்

மார் அடித்து அழுது கொண்டிருக்கும்

சில பெண்களுக்கு அருகில்

கிடத்தி வைக்கப்பட்டவனின்  ரேகைகள்

தறியடித்து அழிந்திருந்தது.

நெசவாளன் வாழ்க்கை இது தானா என

அவன் அருகில் இருந்து

கேள்விகளாய் சுழன்று கொண்டிருக்கிறது

பல திசைகளை நோக்கி பத்தியின் ஜீவாலை.

முன்னொரு காலத்தில் இந்தத்தெரு

இப்படி இருந்ததில்லை.

தறியடிக்கும் நாடாக்களின்

இடைவிடாத சத்தமும்

கூடங்களில் இருந்து வெளியேறும்

கைத்தறிப் பெண்களின் சிரிப்புச்சத்தமும்

தெருவுக்குத்தெரு இருக்கும்

டீக்கடைகளும்,  வடைக்கடைகளும்

கிடைத்த கூலியில் மிச்சம் பிடித்து

மதுரை போத்திராஜாவில்

எம்.ஜி.ஆர் படம் பார்க்கும் கூட்டமும் என

சந்தைக்கடை இரைச்சலில்

சிக்கித்தான் கிடந்தது அந்தத்தெரு.

எட்டாத தூரத்தில் ஏறிய பஞ்சு, நூலின் விலையும்

கட்டாத கூலியும்

நெசவாளர் பலருக்கு

கல்லறைகளைக் கட்டியது.

குடும்பம், குடும்பமாய் பலரை

சொந்த தேசத்தில் அகதிகளாக்கியது.

மானம் காக்க ஆடை நெய்த பலர்

வேலையிழந்து தூக்கினை நாடினர்.

வெட்கம் என நினைக்காமல்

தங்கள் பெற்ற குழந்தைகளைக் காக்க சிலர்

கோவில் வாசல்களில் முகம் மறைத்து

கையேந்திப் பிழைக்கிறார்கள்.

கைத்தறியைக் காக்கவோ

நெசவாளர்களைக் காக்கவோ

திட்டமில்லாமல்

தற்கொலைத் தடுப்பு மையத்தை மட்டும்

கவனமாய் அரசு அமைத்துக் கொடுக்க

பத்தியின் மணம்

அந்தத்தெருவில் கூடுதலாகிக்கொண்டிருக்கிறது.

Pin It