balachandran_630

உயிரையும், உணர்வையும்
ஒரே சமயத்தில்
மென்று துப்புகிறது
அந்தப் பார்வை.
 
அந்தப்பார்வை-
பயந்ததோர் பாலகனின்
பார்வையா...
நிச்சயமாக அல்ல.
 
கோபக்கனல் தெறிக்கும்
கொடூரப் பார்வையா ...
இல்லவே இல்லை.
 
ஒன்றுமே அறியாத
பட்சிளம் பாலகனின்
வெகுளிப் பார்வையா...
உண்மையில் இல்லை.
 
அடுத்தவரை இகழ்ந்து
அகமகிழும்
ஏளனப் பார்வையோ ..அது?
என்றாலும் இல்லை .
 
வேறு என்னதான்
சொல்கிறது
அந்தப் பார்வை,
இனம்புரியாத
சோகத்தில் தவிக்கிறதா?
இனம் வீழ்ந்துவிட்ட
சோகத்தில் பரிதவிக்கிறதோ
பாலகனின் பார்வை...
 
என்னை என்ன
செய்துவிடமுடியும் என
கேள்விக் கணை தாங்கி ,
நடந்துகொண்டிருக்கும்
நடக்கப்போகும்
உண்மையை உணர்ந்திட்ட
நிதர்சனமான பார்வை
அந்தப் பார்வை .
 
ஆயிரம் கேள்விகளை
கண்களில் தேக்கி
நம் மனத்தை
உலுக்கியெடுத்தப் பார்வை அது. 
 
உயிரின் அடியாழம் வரையும்,
உணர்வின் கடைசி நுனி வரையும்
ஊடுருவி
அசைத்துப் பார்க்கும்
அசாத்திய‌மான பார்வை அது.
 
முதல் நாள்
உணவும், துக்கமும்
மறந்து போயிற்று.
 
இரண்டாம் நாள்
பாதி  தூக்கம்  மட்டும்
கரைந்து போயிற்று .
 
மூன்றாம் நாள்
எல்லா செயலும் நடந்தேறின
எப்பொழுதும் போல்...
நினைக்கும் பொழுதெல்லாம்
உயிரையும், உணர்வையும்
ஆயிரமாயிரம்
தொரட்டிகள் மாட்டி 
இழுப்பதுபோல் மட்டும் இருக்கிறது.

நினைப்போமா நாம்?

Pin It