சில நேரம் அறியாமல்
எரித்துவிடுகிறேன்..
தீக்கங்குகளையொத்த நாவால்
நீ சேமித்து வைத்திருக்கும்
பிரியங்களின் பஞ்சுப் பொதியை...

சில நேரம் ஆத்திரத்தில்
கொலை செய்து விடுகிறேன்
பாம்பின் தீண்டலையொத்த பார்வையால்
நீ மிக கவனமுடன் பாதுகாக்கும்
பிரியங்களின் தலைப்பிரட்டையை..

சில நேரம் எதேச்சையாய்
நசுக்கிவிடுகிறேன்
வாசனை திரவியம் பூசும் கைகளால்
நீ அணுஅணுவாய் ரசிக்கிற
பிரியங்களின் ஊர்தலை..

சில நேரம் அறிந்தே
அணைத்துவிடுகிறேன்
புயலின் வேகமொத்த பெருமூச்சால்
நீ எரிபொருள் குறையாமல் பார்த்துவரும்
பிரியங்களின் வெளிச்சத்தை..

சில நேரம் கவனக்குறைவால்
மிதித்துவிடுகிறேன்
யானையின் பலமொத்த கால்களால்
நீ பொக்கிஷமாய் கருதும்
பிரியங்களின் விதைநெல்லை...

எந்த நேரமும்
கவனக்குறைவாலோ
அறியாமலோ
எதேச்சையாகவோ
அறிந்தோ
ஆத்திரத்திலோ
எவ்வகையிலும்
நீ உதை(டை)த்ததேயில்லை
பிரியங்களின் பூமிப் பந்தை

- இவள் பாரதி

Pin It