ஒவ்வொரு மாலையும்
வீட்டிற்குச் செல்லும் முன்
உன்னிடம் மெழுகுவர்த்தி
வாங்கிச் செல்கிறேன்
நாளுக்கு ஒன்றாக
தினம் வாங்கிச் செல்லும்
நானும் மொத்தமாக
வாங்க நினைப்பதில்லை
நீயும் என்னைக் கேட்பதில்லை!
என் அறையில் பற்ற வைத்த
மெழுகை உன்னைப் பார்ப்பதைப்
போலவே பார்த்துக் கொண்டிருக்கிறேன்
அப்படியே கண்ணயர்ந்து போகின்றவன்
விழித்துப் பார்க்கையில் நீ
சொல்லாமல் போனதைப் போல
மனம் வருந்துகிறேன்
அரைத் தூக்கத்தில் நீ
அமர்ந்து சென்ற இடமென
மெழுகுப் படிமத்தை வருடுகிறேன்
உன்னிடம் மெழுகு தீர்ந்த ஒரு நாளில்
எதிர் கடையில் வாங்கச் சொல்லி
என்னை நீ அறிவுருத்தினாய்
நான் வாங்காமல் சென்றதை
கவனிக்கும் அளவிற்கு அதில்
உனக்கு ஈடுபாடு இல்லை
அன்று எனக்கு முன்பாக
உன்னிடம் வாங்கிச் சென்றவரை
வசை பாடிக் கொண்டே
இருளில் சென்று படுத்தேன்
ஏதோ நீ எனக்காக மட்டும்
கடை வைத்திருப்பதைப் போல..!

- அருண் காந்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It