பெரும்பணியைச்  சுமந்த  உடலென்றும்

பெரும்புகழைச்  சுமந்த  உயிரென்றும்

பெரியாரைப்  போற்றியவர்  நம்ஐயா -

பெருஞ்சித்திர  னாரென்றால்  அதுபொய்யா ?

 அருந்தமிழர்  இனமீட்கத்  தம்வாழ்வில்

ஒருநொடியும்  ஓயாது  உழைத்திறந்த

பெருமாந்தர்  பெரியாரை  இன்றுபலர்

புரியாமல்  இகழ்கின்றார்  இதுசரியா ?

 குருடான  ஒருபூனை  விட்டத்திலே

மதியின்றித்  தாவியதாம் ;  அதுபோலே

பொருந்தாப்பல  குற்றங்களைப்  பெரியார்மேல்

புறங்கூறிப்  பிதற்றுகிறார்  இதுமுறையா ?

பெருமையுடன்  செய்யுள்பல  படைத்தளித்துப்

பேரளவில்  இலக்கணங்கள்  வடித்தளித்துப்

பெருகியுள  புலவர்பலர்  தமிழ்நாட்டில்

பெயருக்கு  வாழந்தனரே  தம்பாட்டில் !

பெரும்பேயாய்ப்  பீடையென  தமிழினத்தைப்

பிடித்தாட்டிப்  பிழைப்புற்ற  பார்ப்பனியம்

நொறுங்குறவே  செயலாற்றி  உயிர்விட்ட

நுண்மாந்தர்  பெரியார்தான்;  நினைவிலையா?

அருகிவந்த  தமிழினத்தின்  விடுதலைக்கே

அயராது  தமைவருத்திப்  பாடாற்றி -

குறுகுமன  ஆரியரைக்  குலுங்கவைத்த

கூர்மதியர்  பெரியாரின்  பணிதவறா ?

திருக்குறளைத்  தமிழர்க்குப்  புரிவித்தார்;

இறைப்பற்றுத்  தமிழர்க்கும்  நலம்விளைக்க

சிறைப்பட்டார்  நம்பெரியார்;  அதுபிழையா ?

செய்ந்நன்றி  மறந்திடுதல்  தமிழ்மறையா?

Pin It