நீர்க்குமிழிகள் செய்யும்
அந்த அந்திவான முகில்கள்..
நீல நிற பண்டங்களை
அளவிற்கு அதிகமாக உட்கொண்டு
பாரம் தாங்காமல் பட்டென்று உமிழ்ந்து விட்டது..

கவிழ்ந்து கிடக்கும் படகுகளைக் கண்டு..
கண்ணில் அணை உடைந்தது
அந்த இரும்புக் கதவுகளின் பின் நின்ற சிறுவனுக்கு,,,

வீதியில் நடந்த புதுச்சட்டைக்காரன்..
பூமி பிளவுண்டது போல்..
பேரதிர்ச்சிகுள்ளனான்..
வாகனம் ஒன்று அவன் மீது வாரி அடித்த சேற்றைக்கண்டு..

மடமடவென மூட்டைகளை
இறுக்கிக் கட்டி..
உல்லாசமாய் நனைந்து கொண்டிருந்த
இளங்காளையின் முதுகில்
வண்டியை பூட்டி..
அசுர வேகத்தில் கடைகள்
காணாமல் போயின..

விண்ணின்று பெருக்கெடுத்த அருவியால்..
இன்று பிறந்த சிசுவைப் போல்..
தார்ச் சாலைகள் தங்கமாய் மின்னின..
கார்கள் கப்பல்கள் ஆகின..

கடைசி சொட்டு முடிந்து
கால் வினாடி ஆயின..
ஒரு கை கிழிந்து..
மறு கை இழுத்துப் பிடித்து..
நூறு முறை அந்த இரட்டை எண் கொண்ட தாளை..
பார்த்துப் பார்த்து பூரித்து..
கால் சட்டையில் பத்திரப்படுத்தி..
செருப்புகள் நடந்த சாலையில்
சிவந்து கிடக்கும் கால்கள் கடக்க..
கவிழ்ந்து கிடக்கும் கப்பலைக் காணாமல் ..
முழு சட்டை உடுத்தியவனின் புலம்பல் கேளாமல்..
காலையில் பார்த்த கடைகளை கவனிக்காமல்..
பளீரென மின்னும் தார்ச் சாலைகளை எதிர் நோக்காமல்..
இளஞ்சிவப்பில் இளகிய கரங்கள் கொண்ட
பட்டாம்பூச்சி ஒன்று..
அகரம் படித்து
சிகரம் தொட வேண்டிய ஈரைந்து நிரம்பிய
இனிமை ஒன்று..
சிட்டென பறக்க வேண்டிய சின்ன பறவை ஒன்று..
வண்ணங்கள் விற்று..
புத்தகங்கள் மறந்து..
சிறகுகள் வெட்டுண்டு..
பால் மணம் மாறாத பச்சிளம்
கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்..

அந்த பாட சாலையை கடக்கும் போதெல்லாம்..
மனம் கணம் கொள்ளும் முன்..
விரைந்து செல்ல இரட்டைச் சிறகு ....

-- திவ்யபாரதி.கி

Pin It