நீர்நிலைகளை உருவாக்கி வைத்தேன்
அவற்றில் மீன்களை நீந்தவிட்டேன்
பிதுங்கிய நிலப்பரப்பை
கடல் மட்டத்தின் மேலெழும்பச் செய்தேன்
கரையோரம் ஒதுங்கிக் கொள்ளும்
ஆமைகளையும் முதலைகளையும்
பின்னர் சேர்ந்தே உருவாக்கினேன்
காடு கழனி உருவாக்கினேன்
அவற்றில் பாடும் குயில்களுடன்
கோட்டான்களையும் பறக்கச் செய்தேன்
பின்னர் மெல்ல ஊர்ந்து செல்லும்
அனைத்தையும் உருவாக்கிப்பின்
பரிணாமம் நிகழக்காத்து நின்றேன்
நிகழ்ந்தவை அனைத்தையும் தாவும்
விலங்கென அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்
அடுத்த கட்டத்தின் நிகழ்வென
காடு சமைந்து நாடாக்கிய அவனை
வளரச்செய்து இப்போது நான்
அருகிக்குறுகி வரும் மழைக்காடுகளில்
வசிக்கத் தொடங்கியிருக்கிறேன்
மிருகத்தின் நினைவில் எப்போதும்
காடு வசிக்கும் என்றே நினைத்திருந்தது
பிழையென உணர்ந்தேன்
அருவி மலைகள் இன்னபிற
இயற்கை யாவையும் அழித்துக்
கல்லாய்ச் சமைத்தவனை
பிறிதொரு பரிணாமத்திற்கு
எடுத்துச்செல்ல வேண்டி
ஒரு பெருவெடிப்பிற்கெனக்
காத்திருக்கிறேன் இப்போது.

- சின்னப்பயல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It