நவீனம் மிதக்கும் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் காலம்
தன் பொது ஒழுக்கத்தின் விரலை
வாயில் வைத்து சப்பிக் கொண்டிருந்தது
வெறுப்பையோ, நிறபேதத்தையோ
பிரசவிக்கும் மனிதனை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது
பெண்ணின் கர்ப்பகாலம் போலில்லை ஆணுடையது
குரோதத்தையோ, வன்மத்தையோ கருத்தரித்த
சில வினாடிகளில் பிரசவிக்க முடியும்
சாதிவெறியை கருத்தரிக்க மனிதன் ஒருவன்
தன் சக மனிதன் வாயில் மலத்தை திணிக்கிறான்
இந்த வன்முறை அசாதாரண நிகழ்வு
அசாதரண நிகழ்வுகளால் ஆக்கப்பட்டிருக்கிறது
நம் ஊர்கள்
மலத்தை ஊட்டியவன் அதே கையில்
தன் குழந்தைக்கு சோறுட்டுகிறான்
மலம் தின்றவன் சடலத்திலிருந்து
மீண்டெழுந்து போகிறான் உயிர்த்தெழாமலே
கோபமடைந்த கிழவி
புனித நூல்களின் பக்கங்கள் கிழித்து
வாசலில் கிடந்த பன்றியின் மலத்தை
வாரியெடுத்து குப்பைலெறிகிறாள்
எல்லாவற்றையும் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்த நாயொன்று
ஓடி ஒளிந்த கடவுளை
கவ்வி வந்து வெளியே போட்டு
தன் ஒரு காலை தூக்கிற்று
Pin It