கண்ணீர்க் கதை

என்னை வளர்த்தெடுத்த
ஆதிச் சொல்லே
என்னைக் கொலை செய்ய துணிந்த
கண்ணீர்க் கதையினை
எங்கே போய் சொல்ல?
எப்படிச் சொல்ல?
சொல்லி என்ன செய்ய?
எதற்குத் தான் சொல்ல?

மீண்டும் ஒருநாள்
மன்னிப்பின் சிறகுவிரித்து வரக் கூடும்..
அந்த ஆதிச் சொல்..
அதனால் இப்போதே தயாராகிறேன்..
கண்ணீர்க் கதையை எனக்குள்ளேயே புதைக்க..

===========

நீ உணர மறுத்த காதல்

உன்னையே தேடிக் கொண்டிருந்த
எனக்கு வாய்த்துவிட்டது
என்னைத் தேடும் ஒருவனின் தேடல்..

நீ எதிர்பார்த்திருந்த
நிபந்தனைகள் எதையும்
என்னிடம் விதிக்கவில்லை அவன்..

நான் உன்னிடம் வாரியளித்த
அன்பைவிடவும்
மேலதிகமாய் என்னில் பொழிகிறான்..

என் வழித்தடங்களை
ஒருபோதும் தெரிந்துகொள்ள விரும்பியதில்லை அவன்..
ஆனால் அவற்றால் ஏதேனும் ஆபத்து நேருமென
நானாகவே மேலோட்டமாய் சொல்லி வைத்தேன்..

உன்னால் ஏற்பட்ட காயத்திற்கும்
சேர்த்தே மருந்து குழைக்கிறான்..
உன்னையும் சேர்த்தே நேசிக்கிறான்
நீ என்னால் நேசிக்கப்பட்டதால்..

இப்போது காயங்களாறி
நடமாடத்துவங்கியிருக்கிறேன்.
இனிவரும் மழையிரவுகளில்
அவனுக்காய் அடைகாப்பதற்கு என்னிடம்
அதே கதகதப்போடு மிஞ்சியிருக்கிறது
நீ உணர மறுத்த காதல்..

Pin It