நித்தமும் தோற்றுக்
கொண்டேயிருக்கின்றன‌
கழுகு வரும் திசை
நோக்கிய அவன் கணிப்புகள்
அநாயாசமாய்  உச்சிக்கால
பூசைப் பொழுதுகளோடு
அவனையும் விழுங்கிக்
கொண்டிருந்தது அதனது திசை.

முறை தவறாது பெருமாள்
கோயில் கோபுரத்தைச்
சுற்றிச் செல்லும் கழுகுகளின்
கண்காணிப்பில் அவனுக்குமான
சிறகுகள் முளைக்கத் தொடங்கின.

இளம் சிறகுகளின் பெருத்த
வலிப் பயணத்தில் கழுகைத்
துரத்தி நட்பு கொள்ள முயல்கையில்
கழுகின் சிறகு எதிர் திசை
நோக்கி உயரே விரிந்து
தொலைந்து போனது.

கழுகின் இருப்பிடமும் பயணத்தின்
திசையும் பிடிபடாதலில் கழுகைத்
துரத்தும் பட்டத்தை உருவெடுத்தான்
உச்சிக்கால பூசைக்கு இருபுறமும்
நீள்கின்ற வால்களுடன்
பறக்கலான பட்டம் கழுகைத்
துரத்த ஆரம்பித்தது.

மேலெழும்பிய கழுகைத்
தொடர்ந்த வண்ணம் பட்டம்
உயரே உயரே இன்னும் உயரே
செலுத்தப்பட்டதில்
புலப்படாமல் போயிற்று.

மூன்றாம் வாலாய் நீண்டிருந்த
நூல் அறுந்து தொங்கத்
தொடங்கியதில் பட்டம்  தேடி
தன் சிறகுகளை உயரே
உயரே இன்னும் உயரே கழுகின்
திசை நோக்கி விரிக்கலானான்
அங்கே கழுகு பட்டத்தைத்
தின்று கொண்டிருந்தது.

-சோமா

Pin It