கறுப்பு நானும் சிவப்பு அவனுமாக
ஒரு சேலையில்
எங்களிருவர் முகங்களும் அப்பியிருந்தன

சுவரோவியங்களில் இருக்கும்
தேவதைகளினுடையதென
எனது விழிகளை உவமித்தான்
அவனது மென் தீண்டல்
என் மேனியில் பூக்களாய் சொரிந்தது

சூடேறிய அவனது உதடுகளால்
பனிப்பாறையென இறுகியிருந்த நான்
கரையத் தொடங்கிய கணத்தில்
அவன் வடிவம் கூட்டத் தொடங்கினான்

முழுவதும் பிரிந்துகிடந்த என்னில்
பரிச்சயமான சாயங்களை
திட்டுத் திட்டாய் தடவி
ஓவியம் புரிந்தான்

ஒவ்வொரு புள்ளியும்
ஒவ்வொரு கோடும் திகைப்பிலாழ்த்த
என்னை முழுவதும் சமர்ப்பிக்கிறேன்
சுகமாய் விடிந்தது இரவு

நெளிந்தாடும் மெழுகும்
நீல வெளிச்சம் நிரம்பிய
மூடிய அறையுள்
நானும் காத்திருக்கிறோம்
தடித்த கறுப்பங்கியினுள்
பதுங்கியிருந்த இரவு
அவிழ்ந்து பிரிந்து நகர்ந்தது
அவன் மட்டும் வருவதாயில்லை

அவனுக்கான ஒரு வெற்றுத்தாள்
ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும்
ருசியூறும் ஓவியமொன்றை வரைதலில்
சாயமிடுதலில் தீவிர கவனமாய் இருப்பான்
இன்றேல்,
இன்னுமொரு பாறையை
பனியாய் கரையச் செய்வதில் மூழ்கியிருப்பான்
எப்படியும் ஓவியம் தீட்டுவதை நிறுத்தமாட்டான் அவன்

ஆனபோதும்,
நான் காத்திருக்கிறேன்
அவன் வடிவம் கூட்டும்
பிறிதொரு பொழுதில்
அவனிடம் என்னை சமர்ப்பிக்க…!!!

Pin It