கையில் அகப்பட்டதையெல்லாம்
எடுத்து எறிகிறாய்.
சின்னக் குழந்தையென்றெண்ணிப்
புன்னகைக்கிறேன்.

நீ சிதறிச் சென்ற
புத்தகங்களையெல்லாம்
அடுத்த முறை நீ கலைக்க ஏதுவாய்
அடுக்கி வைக்கிறேன்.

மீன் தொட்டிக்குள் ரவைகளைச் சிந்தும்
உன் பணியைப் புறந்தள்ளிப்
படுக்கையில்
அழுவதைப் பார்த்தவுடனே
உன் மீன்களுக்கு நான் உணவிடுகிறேன்.

கொதிக்கிற கோபத்துடனே
அகப்படுகிற
ஆடைகளைத் திணித்துக்கொண்டு
அவசரமாய் நகரத் துடிக்கிறாய்.
நான் கைகட்டிப் பார்த்திருக்கிறேன்.

சென்றுவிடுகிறாய்.
போனமுறை மாதிரியே.
உள்ளூரைச் சுற்றிவிட்டு வந்து
கதவுதட்டுவாய்.
திறக்கக் காத்திருக்கிறேன்.

அப்பொழுதும் அழுவாய்.
அது வேறு அழுகை.
கிட்டவந்து
சட்டை திருகி
மார்பில் குத்தித்
தோளில் சரிவாய்.

ஏற்றுக்கொள்வேன்.
இனிமேல் இப்படிச்செய்யாதே
என்ற கண்டிப்புடன்.

ஒவ்வொரு முறையும்.

Pin It