ஒரு வாக்கியத்தில் உனைப்பற்றிச் சொல்லச்சொன்னாய்.
சொன்னேன்.
"காதலின் பேருருவம் நீ மட்டுமே"

ஒரு வார்த்தையில் சொல் என்றாய்.
சொன்னேன்
"காதலரசி".

ஓரெழுத்தில் முடியுமா..?
சொல்லிவிட்டேன்.
"நீ"

பின்னதான ஊடல் கணங்களின்
நோய்மையில்
வதங்குகிறேன்.
ஏனெனத் தெரியும் வரை.

உனைப் பற்றிச் சொல்லச் சொல்லியிருக்கிறாய்.
சொல்லிக்கொண்டுமிருக்கிறேன்.
ஒரு மௌனத்தில்
.............................................................................
9 ஊடல் காலம்:
..........................................................
இரண்டு மழைகள்
மூன்று முழுநிலா
உட்பட
எழுபத்தாறு தினங்களாக
நம் இதழுண்ணாவிரதம்.
தொடர்கிறது.
...........................................................................................
10.யாரைப் பற்றியெல்லாம்
நான் பேசினால் உனக்குப் பிடிக்காதோ
யாரைப் பற்றியெல்லாம்
நான் நினைப்பதைக் கூட அனுமதிக்க மாட்டாயோ
யாரைப் பற்றியெல்லாம்
நான் புகழ்ந்து சொன்னால் சுருங்குவாயோ
யாருடைய எண்களை எல்லாம்
என் செல்பேசியிலிருந்து நீ நீக்கினாயோ..
இன்னமும் அவர்களைத்
தேடுவதே இல்லை
நான்

Pin It