காலியாகிவிட்டதா எனக்கேட்கிறாய்.

காலியாகிவிட்டதா எனக் கேட்கையிலேயே
அந்தக் குரல் பரிகசிப்பதைக் கட்டுக்குள் அடக்கும்
மாயவித்தை கைவருகிறது உனக்கு.

காலியாகிவிட்டதா  எனக் கேட்பதன் மூலம்
உன் கை தானியங்களை
சிந்தி நிரப்பத் தயாராயிருப்பதைப் போன்ற
தோற்றமளிப்பதை விரும்பியே அவ்வாறு கேட்கிறாய்

காலியாகிவிட்டதா  எனக் கேட்காமல் விடுவதைப்
பெரிய பாவமென்று பின்னால்
குற்றம் சொல்லப்பட்டுவிடக் கூடாதென்றும்
அவ்வாறு கேட்கச் செய்திருக்கலாம்.

காலியாகிவிட்டதா எனக் கேட்பதற்கு
முதலில் முன்வருவதன் மூலம்
முதலில் வெளியேறிவிடலாமென்ற
கணக்கும் காரணமாயிருக்கலாம்

காலியாகிவிட்டதா என எத்தனை பேர் கேட்கிறார்கள்
என்று எண்ணியறிய
உன்னை வரவேற்றுக்கொள்ளவும்
முதலாகக்
கேட்கச்செய்திருக்கலாம்.

காலியாகிவிட்டதா எனக் கேட்பதன் மூலம்
இன்னும் எஞ்சியிருப்பதை அறிந்து கொள்ளும்
உரிமையை பரிசளித்துக் கொள்ளவும்
தலைப்பட்டிருக்கலாம்.

காலியாகிவிட்டதா எனக் கேட்டு பதிலுக்காகக்
காத்திருப்பதே தியாகங்களின்
துவக்கம் என்று அறிவிக்கவும்
ஈடுபட்டிருக்கக்கூடும்

காலியாகிவிட்டதா எனக் கேட்பதற்குள்
ஓரு உயரமும் ஒரு பள்ளமும்
ஒரு வள்ளலும் ஒரு யாசகனும்
ஒரு மோதிரங்களணிந்த கையும்
இரண்டு காய்த்த கரங்களும்
ஒரு அதிகாரமும் ஒரு அடிமைத்தனமும்
ஒரு கபடமும் ஒரு அறியாமையும்
அரசியலை நுகரும் இச்சையும்
இருப்பதை நீ அறிந்திருக்கிறாய்

நீ சிந்திய தானியத்தின்
நீ போட்ட ரொட்டித் துண்டின்
நீ சிந்திய நாணயங்களின்
மதிப்பிற்குப் பல மடங்கு
மிகுமதிப்புள்ள பெருவாழ்வை
வாழுமாறு வாழ்த்தி உன்னை
வழி அனுப்புகிறேன்.

Pin It