வழிபடு வோரோ பிறர்பழிப் போரோ
மொழிதேறா வர்க்கச் சார்புடன்
வினைஞர் மாண்பே மெய்யெனக் கொண்டு
முனைந்து செல்வதே புவியின் விடுதலை
அறிஞர் வாழ்வு மெய்யாய் மலர்வது
முறியா வினைஞர் ஆட்சியில் எனினும்
உறுதி யின்றி ஊசல் ஆடுவார்
புவியின் வெப்பம் உயர்ந்திடும் நாளில்
அவியினும் வாழினும் இலாபம் கைவிடா
சந்தையின் தேர்வு மாசுமிகுத் தொழிலே
இந்நிலை தொடரின் புவியின் அழிவு
ஒறுத்தல் ஆகும் மற்ற உயிர்க்கும்
குற்றம் புரியும் மனிதனின் செயலால்
மற்ற உயிர்களும் மாள்வது சரியோ
சந்தையைக் காக்கும் மனிதரை ஒறுக்க
வினைஞரின் சார்பில் அறிஞரே திரள்வீர்
 
(முகத்திற்கு முன்னால் புகழ்வோருடைய பேச்சுக்களையும் புறங்கூறுவோருடைய பேச்சுக்களையும் மனதில் கொள்ளாமல், வர்க்கச் சார்புடன் தொழிலாளர்களின் சிறப்பையே உண்மை எனக் கொண்டு செயல்படுவதே அனைத்து மக்களுக்கும் சுதந்திரத்தை அளிக்கும். (அப்படிப்பட்ட) தொழிலாளர்களின் முழுமையான அதிகாரம் கொண்ட ஆட்சியில் தான் அறிஞர்களின் வாழ்வு உண்மையாய் மலரும். ஆனால் அறிஞர்களோ (தொழிலாளர்களின் பக்கம் உறுதியாக நிற்காமல்) ஊசலாடிக் கொண்டு இருக்கிறார்கள். புவி வெப்பம் உயர்ந்து கொண்டிருக்கும் இந்நாளிலும், யார் அழிந்தாலும், யார் வாழ்ந்தாலும், இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள சந்தைப் பொருளாதாரம் (புவி வெப்பத்தை உயர்த்தக் கூடிய) மாசுமிகுத் தொழில்களை மட்டுமே செய்யும்படி கட்டாயப்படுத்துகிறது. இந்நிலை தொடர்ந்து கொண்டே இருந்தால், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற உயிர்களுக்கும் இப்புவியின் அழிவு தண்டனையாக அமையும். மனிதன் செய்யும் குற்றத்திற்கு மற்ற உயிரினங்களும் மாள்வது நியாயமாகுமா? சந்தைப் பொருளாதார முறையைக் (காவு கொடுக்க மறுத்து) காப்பாற்றிக் கொண்டு இருக்கும் மனிதர்களைத் தண்டிக்க தொழிலாளர்களின் சார்பில் அறிஞர்களே ஒன்று திரளுங்கள்.)

Pin It