முன்பொரு கவிதைகளில்
இல்லாத ஒரு உயிர்
மரிக்க தொடங்கியிருந்தது
இக்குறிப்புக்குள்...

மௌனங்கள்
வாய் விட்டு அழுகிறதென்ற
ஒரு வரம்பு மீறிய பொய்
என் விதிகளுக்கு உட்பட்டது தான்!

நெடு நேர பேச்சுக்கள்
மௌனங்களாகவே முடிந்த
இரவை என்னவென்று குறிப்பிட்டு வைக்க?

அவள் முதல் முத்தமும்
அது சார்ந்த ஈரமும்
முழு காமத்தை வித்திட்டதென
வெட்கம் விட்டு சொல்ல
முடியவில்லை எனக்கு!

அவள் காதலென நெருங்கி வந்தாள்..
நான் காமமென தள்ளி சென்றேன்...
இந்த இடைவெளியை நிரப்பிடவே
பல இரவுகளோடு சண்டையிட்டு
மண்டியிட்டிருக்கிறேன்...

பிறிதொரு நாள்
தன்னை
பெண் பார்க்க வந்ததாய் கதறியவளை 
என்ன சொல்லி ஆசுவாசப்படுத்த?

ஒரு பெருத்த
ஏமாற்றம் எனக்கு!
எதற்கென தீர்மானப்பட
அவசியமும் வரவில்லை...

என் ரெண்டுங்கெட்டான் மனதை
காதல் ஆட்கொண்டுவிட்ட
ஒரு மாலை கடற்கரை சந்திப்பில் ... 

அவள் அழைப்பிதழ் நீட்டியதும்
அலை என்னில்
நுரை துப்பிப்போனது மட்டும்
நினைவிருக்கிறது!

Pin It