வடைகள்  சுட்டுத் தர பாட்டி இல்லாத
வீட்டில் -
அவள் திவசத்துக்கு வாங்கிவைத்த
வடைகளைக் கண்டு
'பாட்டி வடை சுட்ட கதை'
நினைவுக்கு வருகிறது
குழந்தைக்கு

*************************************

காக்கைக்கும்
காக்கை மூலம் நரிக்கும்
கொடுப்பதற்கென்று
வடைகளில் ஒன்றைப்
பால்கனியில் வைத்து
காத்திருக்கிறது குழந்தை

***************************************

வெகுநேரம்  காத்திருந்தும்
வராத காக்கைக்கென
வடையை 
பிரிட்ஜில் பத்திரப் படுத்தும் குழந்தைக்கு-
இதுதான் நரியென்று காட்டுகிறாள் அம்மா
டிஸ்கவரி சேனலில் மேய்ந்து கொண்டிருக்கும்
ஓநாயை-

******************************************

நாளையேனும் காக்கை வருமென்ற
நம்பிக்கையில்
உறங்கச்செல்லும் குழந்தைக்கு மீண்டும்
சொல்லபடுகிறது...
பாட்டி வடை சுட்ட கதை...

*********************************************

அன்றைய கனவில்
காக்கையும் நரியும் பாட்டியும்
வடையைப் பங்கிட்டுத்
தின்றனர்.....
குழந்தைக்கும்   கொஞ்சம்
பிட்டுக் கொடுத்து!

Pin It