ஆடைகள் வழியாய் மீய்ந்து கிடந்த
சொட்டு வெட்கத்தையும் உரித்தாடி
ஆதவன் மாண்டொழிந்தான் கடலுக்குள்
விரசமுற்ற அம்மண நீட்சிகள் மெதுவாய் படர்ந்தன
அம்மண ஒளிக்கற்றைகளை ஓடவிட்டபடி
வீடுகளில் அம்மணமாய் கிடந்தார்கள் மனிதர்கள்.
ஊரோரத்தில் அம்மணமாய் எரியும் ஒரு சிதையைப் பற்றி
கூடிப் பேசின அந்த அம்மண இரவுகள்.
அவன் ஆண்டலைந்த அவன் ராஜ்ஜியங்கள் பற்றியும்
ஒற்றைத் துணியுமற்று கிடந்து வேகும் அவன் கோலங்கள் பற்றியும்
துப்புரவாய் அலசிக் கொண்டிருந்தன அவைகள்
இன்னமும் தங்களைச் சீண்டிராத மனிதக் கையாலாகத்தனங்கள் பற்றி
கெக்கையிட்டுச் சிரித்தன அம்மண இரவு ஜீவிகள்
பூசிய வெள்ளாடை அள்ளித் தரித்தும்
அம்மணப்படும் மாந்த ஈனக் குணங்கள் பற்றி
அம்மணமான ஆலமரத் திண்ணையொன்று
அரைகுறை அம்மண ஆலமரத்துடன் சரசமாடிக் கொண்டிருந்தது
ஒற்றை மூச்சில் எல்லாம் ஏற்றுச் செரித்த படி
அம்மணமாய் ஊர் வலம் கொண்டது ஒரு நிலா.
திடுமென எழுந்தொளிர்ந்த சூரிய வீச்சுக்களிடையே
அம்மண நீட்சிகளெலலாம் ஆடையுற்றுப் போக
ஒட்டியிருந்த ஒற்றையாடையும்
தொடைவழியே உருவத் தொடங்கினர் மனிதர்கள்.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It