அசலான ஒரு நம்பிக்கைக்குள்
மிகு ஆறுதலாக
ஒரு
ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

பிரிவின் துயரை
நகம் கடித்துத் துப்பிவிட
முடிகிறது உன்னால்

இலையொன்று உதிர்ந்து
பூமி தொடும் அவகாசத்தில்
முடிவுகள் எடுக்கிறாய்

மென்மை விரிசலில்
உடையக் காத்திருப்பது கண்ணாடியல்ல
இது நெடுக
இரவுகளில்
நாம் பரிமாறிக்கொண்ட முத்தங்கள்

கோபத்தில் துடிக்கும் உன் உதடுகளில்
எனக்காக
நீ வாசித்துக் காட்டிய
கவிதைகளின் ஈரம்
கொஞ்சமாவது மிச்சமிருக்கும்

ஆனால்
அடம் பிடிக்கிறாய்

என்
அசலான நம்பிக்கைக்குள்
மிகு ஆறுதலாக
ஒரு
ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

ஒரு வருடமாவது
சேர்ந்து வாழ வேண்டுமென..

****
- இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

Pin It