வாருங்கள்
எங்கள் அழுகைகளை
அள்ளிக்கொண்டு போங்கள்
புகைப்படக்கருவிக்குள் அதை பதிவுசெய்து
உங்கள் தேசத்தில்
அதை விற்று பணம் சம்பாதியுங்கள்.
தொலைக்காட்சிகளில் பத்திரிகைகளில்
அதை காட்சிப்படுத்துங்கள்
அழுகைகளுடன் சேர்ந்து வரும்
கண்ணீரில் ஏதோவொன்று கலந்திருக்கிறது
அதை உங்கள் ஆராட்சிக்கூடங்களில்
வைத்து பகுப்பாய்வு செய்யுங்கள்.

அழுகைகள் சுவாரஸ்யமானவை,
பாரமானவை, கோபமானவை,
சிரிப்பானவை.
எங்கள் அழுகை மட்டும்
வலிநிறைந்தவை.
உங்கள் பார்வைக்கு அவையெல்லாம்
பொதுவானவை.
இங்கு மழலைமுதல் முதுமைவரை
அழுகை பரந்துகிடக்கிறது
விரும்பியவற்றை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்
அதற்குத் தடையில்லை.

ஆரவாரித்தழுகிறோம்
வாய்பொத்தியழுகிறோம்
தேவையாயின்
நீங்கள் விரும்பியவரை
அழுகின்றோம். ஏனெனில்
இது அழுகைக்கான பூமியே
நாங்கள் அதற்காகவே
படைக்கப்பட்டிருக்கிறோம்.

- கீ.பீ.நிதுன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It