அது
கனவுப்பூக்கள் மகரம் சிந்திய
கார்காலம்.
இலட்சியத் தேடல்களைத்
தேசியக்கொடியாய் உயர்த்தி
நூலேந்திய வேளையிலே
ஈரத்தென்றலாய் கேசந்தழுவினாய்.
விசாலித்த வான்பரப்பில்
உதிர்ந்து வீழும் விண்கற்களிடையே
ஒற்றைச்சூரியனாய் ஜொலித்தாய்.
ஊடகம் வேண்டாக் கதிர்ப்பாய்
உள்ளுக்குள்ளே கனலடித்தாய்.
மல்லிகை தென்றலில்
எழுதிய வாசகத்தை உன்
புன்னகை என் குருதிக்குள்
விசிறிற்று!
திடீரெனப் பேரிரைச்சல்
பேய்க்காற்று….புயல்….
சூறாவளி…..சுனாமி…..
சுழிக்குள் சிக்கிய நீ
சிறு புள்ளியாகி
எங்கோ தொலைந்தாய்.
காலமெனும் மாபாறை வருசத் துகள்களை
ஒவ்வொன்றாய் உதிர்த்த….உதிர்த்த…
இன்றென் விழுதின் விருது வேளையிலே
அதிதியாய் அமர்ந்திருக்கிறாய்.
உடைந்துபோன
உணர்வுகளின் வடிகாலாய்
ஒழுக முனைந்த
உப்புத்துளிகளை
உறிஞ்சிய கைக்குட்டை ஈரமாகிட
ஆனந்த ஆச்சர்யங்களுடன் பாய்ந்த
நேர்ப்பார்வை விலக்க
சட்டெனத் திரும்புகிறேன்.
தளவாடிச் சுவருள்ளிருந்த முக விம்பத்தில்
பளிச்சிடுகிறது
காதோரம் நரைத்த ஒற்றை முடிக்கும்
வயதின் வரிகள் படியத்துடிக்கும்
நுதலுக்குமிடையிலான
கண்ணாடிக் கண்களுக்குள்
தொக்கி நிற்குமந்த
விடைகாண மறந்தவினா-   
கல்லறையில்தான்
துளிர்த்திருக்குமோ சில களிம்புகள்?

- கிண்ணியா எஸ்.பாயிஸா அலி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It