தமிழகத்தில் பொதுக்கல்விக்கான மிக உரத்தக் குரல் இப்பொழுது எல்லா தரப்பிலிருந்தும் ஒலிப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. காலத்தின் கட்டாயத்தில், இந்தியாவின் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள்கூட இன்று ‘சமச்சீர் கல்வி’ குறித்து பேசிவருவது மகிழ்ச்சியே.

தமிழகத்தில் ஆளும்கட்சி தன் தேர்தல் அறிக்கையிலேயே இது குறித்து குறிப்பிட்டிருந்தது தமிழக அரசியலில் வரவேற்கத்தக்க மாற்றமே. அதேவேளையில், பொதுப்பள்ளி முறையை அனைவரும் ஒன்றுபோல புரிந்து வைத்திருக்கிறார்களா? அல்லது ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் அதை பார்க்கிறார்களா? என்பது இன்று சிந்திக்க வேண்டிய ஒன்று. ஏன் எனில் தற்போதைய அரசின் நடைமுறைகள் நமக்குள் பல ஐயங்களை ஏற்படுத்துகின்றன.

பொதுப்பள்ளி முறை என நாம் கூறுவது அவரவர் வசிக்கும் பகுதியில் அருகில் பள்ளி அமைந்திருக்க வேண்டும். அப்பகுதியில் வசிப்பவர்களின் குழந்தைகள் கட்டாயம் அப்பள்ளியில் மட்டும்தான் பயிலவேண்டும். இதுபோன்று அமைந்திருக்கும் அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான கல்வி முறையும், பாடத்திட்டமும் பயிற்றுவிப்பும் அமைந்திருக்கவேண்டும். அனைவர்க்கும் பயிற்றுமொழி, தாய்மொழியாகவே இருக்கவேண்டும். கல்விக்கான முழு செலவையும் அரசே ஏற்கவேண்டும். அரசிற்கு கல்விக்காக தேவைப்படும் நிதியை மக்களிடம் வரியாக வசூலித்துக் கொள்ள வேண்டும். இப்படியான அமைப்பையே நாம் பொதுப்பள்ளி முறை என்கிறோம்.

இதையே நாம் விரும்புகிறோம். இப்படிப்பட்ட பள்ளிகளில் ஏழை, பணக்காரன் என்ற பேதம் இல்லாமல் அனைத்து மாணவர்களும் ஒன்றாக பயிலும் சூழல் இருக்கும். இப்படிப்பட்ட பள்ளி முறை தமிழகத்திற்கு ஒன்றும் புதியது அல்ல. இந்திய விடுதலைக்கு முன்பும் விடுதலைக்குப் பின் சிறிது காலமும் இப்படிப்பட்ட பள்ளிமுறையே இருந்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொடங்கி இன்று உயர்பதவிகள் வகிக்கும், வகித்த பெரும்பாலான மூத்த குடிமக்கள் தமிழ் வழியில் இப்படிப்பட்ட பொதுப்பள்ளிகளில் பயின்று வந்தவர்களே என்பதுதான் உண்மை.

ஆனால், தற்சமயம் ‘சமச்சீர் கல்வி’ என்ற பெயரில் இன்று நடைமுறையில் உள்ள பலவிதமான கல்வி வாரியங்களை ஒருங்கிணைத்து ஒரே வாரியம் ஆக்கி, பாடத்திட்டத்தை ஒன்று ஆக்கி, பள்ளி இறுதி தேர்வில் பெறும் மதிப்பெண் ஒரே மாதிரியாகி விட்டால் அதுதான் ‘சமச்சீர் கல்வி’ என்ற கருத்தோட்டம் நிலவுகிறது. இது ஆபத்தானது. இந்தியா முழுவதும் உயர் கல்வி வணிகமயம் ஆக்கப்பட்டுள்ளது என்றால் தமிழகத்தில் தொடக்கக் கல்வியே வணிகக் கூட்டத்திடம் சிக்கி சீரழிகிறது என்பதே உண்மை.

உலகமயமாக்கல் பரப்பும் நுகர்வு கலாச்சாரத்திற்கு நாம் இரையாகி வரும் இக்காலகட்டத்தில் அடுத்த தலைமுறை பயனுள்ள குடிமக்களாக வளர, நம் மக்கள் தொகை மனிதவளமாக மாற பள்ளிக்கல்வி அரசின் அரவணைப்பில், பொதுப்பள்ளி முறையில் அமைவது அவசியம்.

Pin It