மரூரில் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு திருவிழா நடந்தது. அதன் பெயர் "தரிசனப் பெருவிழா." ஒரு முகம் நகரத்திற்குள் வரும் நாள்... அவ்வளவுதான்.

மரூரின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு முன், "தலைவர் வாழ்க!" என்று சொல்லித்தான் வகுப்பறைக்குள் நுழைந்தார்கள். அந்த நகரத்தில் குடிமக்கள் இல்லை; ரசிகர்கள் மட்டுமே இருந்தார்கள். அவர்கள் வாக்களிக்கவில்லை; தரிசனம் செய்தார்கள்.

image buildupஒரு சிறுவன் தன் தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தான்.

“எங்கே போறோம்?”

“தரிசனம் பார்க்க.”

“என்ன கிடைக்கும் அதனால?”

தந்தை பதில் சொல்லவில்லை. அவன் நடையை வேகப்படுத்தினான்... அவ்வளவுதான்.

நண்பகலுக்குள் சாலைகள் நிரம்பின. அது ஊர்வலமல்ல, ஆறு. அதில் தண்ணீர் ஓடவில்லை—உணர்ச்சிகளும் கோஷங்களும் ஓடின. மனிதர்கள் மட்டும் நின்றுவிட்டார்கள். கூட்டத்திற்குள் நுழைந்தபின் யாராலும் நடக்க முடியவில்லை; கூட்டம்தான் நடத்தியது.

முதலில் ஒரு செருப்பு காணாமல் போனது. பிறகு ஒரு குழந்தையின் அழுகை. ஒரு தாயின் கை, இழுக்கப்பட்டுப் பிரிந்தது. ஒரு தந்தையின் மூச்சு, நின்றுவிட்டது. இறுதியில்... சில உயிர்கள்.

ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்ட முதல் வாக்கியம்: "தரிசனம் வெற்றிகரமாக நிறைவடைந்தது." ஆம்புலன்ஸ் சைரன் அதற்குப் பின்தான் கேட்டது.

மரூரின் வானத்தில் அன்று மாலை ஒரு புதிய பறவை பறந்தது. ஒரு முகத்திலிருந்து இன்னொரு முகத்திற்குப் பறந்துகொண்டே இருந்தது—"அவர்தான் காரணம்." "இவர்கள் சதி செய்தார்கள்." அந்தப் பறவை ஒருமுறைகூட இறந்தவர்களின் வீட்டு வாசலில் இறங்கவில்லை.

மரூரின் சுடுகாட்டில் மட்டும் கொடியும் முழக்கமும் இல்லை. மண்ணுக்குள் போனவர்கள் அனைவரும் ஒரே அளவு.

மூன்று நாட்களுக்குப் பின் மாயக்கண்ணாடி ஒவ்வொரு வீட்டிலும் ஒளிர்ந்தது. அதற்குள் ஒரு முகம் தோன்றி, ஒரே வாக்கியத்தை மீண்டும் மீண்டும் சொன்னது: "என் மீது பழி சுமத்துகிறார்கள்."

அந்த வாசகம் மரூரின் தெருக்களில் நடந்தது. ஒரு தேநீர்க் கடைக்காரன் அதை நான்கு முறை மீண்டும் சொன்னான்—ஒவ்வொரு முறையும் கொஞ்சம் நம்பிக்கையுடன். அவனுக்கு அருகில் நின்ற ஒரு நெசவாளர் பெண் மட்டும் மெதுவாகச் சொன்னாள்: "அவங்க அழைச்சாங்க, அவங்களே கலைச்சாங்க. நடுவுல செத்தது யாரு?"

யாரும் அவளுக்குப் பதில் சொல்லவில்லை. அவள் தன் தறி நூல்கண்டைத் தூக்கிக்கொண்டு நடந்தாள்.

ஒரு உயிர் மண்ணுக்குள் போவதற்கு முன்பே கோப்புகள் மேசைகள் மேல் ஏறத் தொடங்கிவிடும். அந்தப் படிவத்தின் பெயர்: "நிவாரணம்." கணக்குப் பிள்ளையின் புத்தகத்தில் விசித்திரமான கணக்குகள் இருந்தன—ஒரு உயிர் = ஒரு தொகை, பத்து உயிர்கள் = சிறப்பு நிவாரணம், சில நேரம் ஒரு அரசு வேலையும்.

அரசவை கூடியபோது, ஓர் இளம் எழுத்தாளன் தன் காகிதத்தில் ஒரு கேள்வியை மட்டும் எழுதி, யாருக்கும் காட்டாமல் மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்: "எல்லையில் உயிர் துறந்த வீரனுக்கும், கூட்ட நெரிசலில் இறந்தவனுக்கும் நாம் ஒரே வார்த்தையைப் பயன்படுத்தும்போது—யாரைத்தான் கௌரவிக்கிறோம்?" அவன் அதை யாரிடமும் கேட்கவில்லை; காகிதத்தையும் யாரிடமும் காட்டவில்லை.

மரூரில் துக்கத்திற்கும் ஒரு கால அட்டவணை இருந்தது. முதல் நாள் அழுகை, இரண்டாம் நாள் அரசியல், மூன்றாம் நாள் பழி, அதற்குப் பிறகு மறதி.

சில வாரங்களுக்குப் பின் அரண்மனை வாயில் திறக்கப்பட்டது. துக்கம் நடந்து வர வேண்டியிருந்தது; ஆறுதல் நடக்க வேண்டியதில்லை. ஆறுதல் சொல்பவர் உயர்ந்த இருக்கையில் அமர்ந்திருந்தார்.

வரிசையில் நின்ற ஒரு தாய், தன் மகனின் புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி மணிக்கணக்கில் காத்திருந்தாள். அவள் முன் வந்தபோது, தலைவர் அவள் கையைப் பிடித்து இரண்டு விநாடிகள் வைத்திருந்தார். புகைப்படக் கலைஞர் அந்த இரண்டு விநாடிகளையும் பதிவு செய்தார். அந்தப் புகைப்படம் மறுநாள் ஒவ்வொரு பத்திரிகையிலும் அச்சாகியிருந்தது.

அரண்மனையில் ஒரு பழைய கண்ணாடி இருந்தது. அதன் முன் நின்றவர்கள் தங்கள் முகத்தைப் பார்க்க முடியாது—தங்களைப் புகழ்பவர்களின் முகங்களைத்தான் பார்ப்பார்கள். கண்ணாடி சொன்னது: "நீங்கள் குற்றமற்றவர். உங்கள் மீது பழி சுமத்துகிறார்கள்."

அந்த வார்த்தை தலைவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் அதை மனப்பாடம் செய்துகொண்டார். அதன்பின் எங்கு சென்றாலும் அதையே சொன்னார்.

ரசிக வெறி மற்றும் கூட்ட நெரிசலில் தாயை இழந்த ஒரு குழந்தை தன் தந்தையிடம் கேட்டது: "அப்பா, தலைவர் நம்ம வீட்டுக்கு ஏன் வரல?"

தந்தைக்கே பதில் தெரியவில்லை. அவர் குழந்தையின் தலையைத் தடவிவிட்டு வேறு பக்கம் பார்த்தார்.

பல ஆண்டுகள் கடந்தும் அந்தச் சாலையும் மேடையும் அப்படியே இருக்கின்றன. மாறாதது இன்னும் ஒன்று—கூட்டங்கள். மாறுவது மட்டும் பலிக்கடாக்களின் பெயர்கள்.

அந்த நெசவாளர் பெண் இப்போது கிழவியாகிவிட்டாள். அவளுடைய பேத்தி ஒரு நாள் அவளிடம் கேட்டாள்: "பாட்டி, நீ ஏன் தரிசனத்திற்குப் போகல?"

கிழவி ஒன்றும் சொல்லவில்லை. தறியின் முன் அமர்ந்து, நூலை இழுக்க ஆரம்பித்தாள்—அதே நேரத்தில், அதே தாளத்தில், ஒவ்வொரு வருடமும்.

மரூரின் ஓலைச்சுவடியில் யாரோ கடைசியாக இரண்டு வரிகள் எழுதியிருந்தார்கள், பெயரில்லாமல்:

"அவர்கள் கூட்ட நெரிசலில் புதையவில்லை; பிம்பங்களை மனிதர்களைவிட உயரமாகக் கட்டிய சமூகத்தின் நிழலில்தான் புதைக்கப்பட்டார்கள்."

- கோபி சேகுவேரா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.