Chennai Street அதிகாலையின் பரபரப்பில் தூக்கம் தொலைந்ததாகப்பட்டது எனக்கு. எழுந்திருக்க மனமின்றி பார்வையை வெளிக்கொணர்ந்தேன். எனக்கு வியப்பு இதற்குத்தான் என்றில்லை எதற்கு எடுத்தாலும் ஒரு ஆச்சர்யம் தொற்றிவிடும். இந்த மனிதன் தூங்குவதாக எனக்கு தோன்றவில்லை. தூங்குகிறான் என்றால் அதிகாலை அதுவும் 4, 5 மணிக்கே எப்படி இத்தனை மனிதர்கள் அதுவும் பரபரப்பாக...

என்னுள் எழுந்த கேள்வி என்னைக் கடந்து சென்ற வாகனத்தால் நசுக்கப்பட்டது. மீண்டும் ஒரு வாகனம் அதே போன்ற இரைச்சலுடன் என்னை கடந்து சென்றபோது மீட்கப்பட்டேன். நாட்கள் செல்லச் செல்ல எல்லாமே பழகிவிடுகிறது. எவ்வளவு தான் மனிதன் தன்னை வளர்வதாகக் காட்டிக்கொண்டாலும் அதற்கு சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ அடிமைப்பட்டுக் கொண்டிருக்கிறான். பால் மற்றும் பேப்பர் போடும் சிறுவர்கள் சைக்கிளில் இறக்கை பொருத்தப்பட்ட பறவையாகச் சுதந்திரமாகப் பறந்து கொண்டிருந்தனர். அவர்கள் விநியோகிக்கும் பத்திரிக்கை மற்றும் பால் நிறுவனங்களின் வளர்ச்சியுடன் இவர்களின் வளர்ச்சியையும் ஒப்பிட்டு பார்க்க நினைந்து பின் மறுத்தது மனது.

அதிகாலை சாலை ஓரத்து கட்டிடங்களிடையே வெளிச்சப்புள்ளி அதிகரிக்கத் தொடங்கியது ஆட்களின் வருகையும் தான். சூடான டீயோ, காபியோ ஊதி ஊதிக் குவளையைக் கையில் பிடித்துக்கொண்டு பத்திரிக்கைச் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன். சூடான செய்தியாக இருக்கும் போல!

இப்பொழுது எல்லாம் மனிதர்கள் நீராகாரம் குடிப்பதில்லை, அதிகாலைக் காபி அதனுடன் ஒரு போண்டா (வாயை கொப்பளித்திருக்க கூடாது ருசி போய்விடும் - எங்கனா பக்கத்து கடைக்கு) போண்டா பொரிக்கும் சப்தம் என்னை முன்னோக்கி இழுத்தது. எண்ணை தழும்பும் சட்டிபோல எண்ணை வடியும் முகத்துடன் ஒருவன் சல்லடை கரண்டியால் உருண்டையுமான நீட்டமுமான பலகாரங்களை அள்ளிக்கொட்ட அவ்வப்போது வெந்துவிட்டதா என்று பரிசோதிக்க நெற்றி வியர்வையை வழித்து எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க எண்ணை சட்டிக்குள் சுண்டிவிட்டுக் கொண்டிருந்தான். சட்டியும் அதனை ஏற்பதாக சுளீர் என்ற சப்தத்தை ஏற்படுத்தி எண்ணையை துள்ளச்செய்தது. அது பக்கத்தில் இருப்பவர் மேல் பட்டிருக்க வேண்டும். எரிச்சலுடன் பஜ்ஜியைப் பிய்த்துக்கொண்டு நகர ஆரம்பித்தார்.

காற்றினிலே வரும் கீதமே

அட இது இல்லை,.

ஓம் சக்கா சக்கா சக்கி,
ஓம் சிச்சா சிச்சா சிச்சி..,

புலப்படவில்லை தொலைவில்தான் இருக்க வேண்டும் அந்தக் கோவில். இப்பொழுது எல்லாம் மார்கழி என்றில்லை மாதத்தில் பல நாட்கள் பெண்கள் காலையில் கோவில்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். சனி அன்று அங்கு புதனன்று இங்கு என அட்டவணை போட்டு இருப்பார்கள் போல, நகரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முதலீடு கோவில் கட்டுவது.

அரைத்தூக்கத்தின் பிதற்றலாக மழலை பேச்சுகள் என்னை கடந்து சென்றன. காலை சங்கீதமாகவோ, எல்.கே.ஜி அரியரை முடிக்கவோ இருக்கலாம். அதிகரித்துவிட்ட சன நடமாட்டத்தின் கால்களுக்கிடையே என்னால் கவனிக்க முடியவில்லை.

ம்.., உலகம் இவ்வளவு தானா!

பழகிவிட்ட சப்தங்களுக்குள் மீண்டும் தூக்கம் என் கண்ணைச் சுழற்ற ஆகாயபவனின் நேற்றைய மிச்சம் நிரம்பிய குப்பைத்தொட்டியைக் குத்தகைக்கு எடுப்பதில் வாய் தகராறு ஏற்பட்டிருக்கும் நாய்களையும் கடந்து என் குறட்டைச்சப்தம் கேட்கத் தொடங்கியது.

- பாண்டித்துரை
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It