இயல், இசை, கூத்து என மூன்றாகப் பிரித்து முத்தமிழ் என்று போற்றினர், நம் முன்னோர்கள். அன்று முத்தமிழிலுமே நற்றமிழ்தான் வழங்கி வந்தது. அப்படி வழங்கி வந்தால்தானே அனைவருக்கும் புரியும்படியான பொதுமொழியாக இருக்க முடியும். ஆனால் இன்று எழுத்தில் மட்டும்தான் தமிழ் உயிfர்ப்புடன் திகழ்கிறது.

எழுத்துத் தமிழ் என்றும் பேச்சுத்தமிழ் என்றும் பிரிந்து பல காலமாகிவிட்டது. ஆனாலும் எழுத்துத் தமிழ் ஒன்றே நம் அனைவரையும் இனம் மற்றும் உணர்வு ரீதியாக ஒன்றுபடுத்தி வருகிறது. இதிலும் பல சிக்கல்கள் எழுந்துள்ளன என்பதை யாராலும் மறுக்க இயலாது.

எழுத்தறிவு என்பது ஏதாவது ஒரு வகையில் எழுதும் பழக்கத்தையோ அல்லது படிக்கும் பழக்கத்தையோ கடைபிடித்தாலேயொழிய எழுத்தறிவு வளர்வது என்பது சாத்தியமாகாது. ஒரு காலத்தில் உறவினர்களுக்கு கடிதங்கள் எழுதியாவது எழுதும் வழக்கம் நம்மிடையே இருந்து வந்தது. ஆனால் அதிதொழில்நுட்ப உலகில் கைப்பேசி கொண்டு உடனுக்குடன் செய்திகளைப் பரிமாறிக்கொள்கிறோம். கடிதம் எழுதுவது என்பது ஒரு கலையாகவும் கருதப்பட்டது. அதேபோல் புத்தகங்கள் படிக்கும் வழக்கமும் இளம்பருவத்தினரிடம் குறைந்து வருவது வேதனை தரும் விடயமாகும். இன்று விரைவு உணவகங்களைப் போல காட்சி ஊடகங்களான திரைப்படங்களும் தொலைகாட்சிகளும் பெருமளவு இன்றைய இளவட்டங்களை ஆக்கிரமித்துள்ளது என்பதனையும் யாரும் மறுக்க இயலாது.

இன்றைய தமிழ் ஊடகங்களில் தமிழ் அவ்வளவு தரமானதாக இல்லை. கல்விக்கூடங்களில்கூட இன்று தமிழை ஒரு தேர்வுப் பாடமாகத்தான் நோக்குகிறார்களேயன்றி, தாய்மொழி என்ற உணர்வோ சற்றும் கிடையாது. ஒரு மாணவருக்கு இருக்கும் மொழிப்புலமையை அவர் பெறும் மதிப்பெண் மூலம் அறிய விழைவது ஒரு பெரும் அவலமாக உள்ளது. மனப்பாட சக்தியுள்ளவர்கள் வெற்றி பெறும் வெறும் நிகழ்வாக உள்ளது இன்றைய தேர்வு முறை. அதற்காக வெற்றி பெறுபவர்களுக்கு மொழிப்புலமை கிடையாது என்பதல்ல நமது வாதம். வெற்றி பெற்றவர் அனைவரும் மொழிப்புலமை அடைந்தவரல்ல, என்பதே நாம் சொல்ல விழைவது.

அறிவியல் உலகில் ஊடகங்களின் எண்ணிக்கை மிகவும் பெருகிவிட்டது. இன்றைய தமிழ்ச்சமுதாயத்தில் விரும்பியோ விரும்பாமலோ மிகப்பெரிய ஊடகமாக திகழ்வது திரைப்படங்களாகும். ஆனால் அதன் தரத்தை நாம் நன்கு அறிவோம். திரைப்படத்தின் தலைப்பு கூட தமிழில் காண்பது அரிதாகி வந்த நேரத்தில் தமிழார்வலர்களின் போராட்டங்களின் விளைவாக, தமிழ் திரைப்படத்திற்கு தமிழில் பெயர் ச>ட்ட இவர்களுக்கு வரிச்சலுகையென்ற பெயரில் கையூட்டு அளிக்க வேண்டி வந்த நிலைமையையும் நாம் அறிவோம்.

முத்தமிழில் ஒன்றான நாடகத்தமிழ்தான் இன்று திரைப்படங்களாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் இன்றையச் சூழ்நிலையில் இப்படங்களில் தமிழ் எத்தனை விழுக்காடு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிய வேண்டும். அன்று தயாரித்த திரைப்படங்கள் அனைத்தும் தூயத்தமிழில்தான் இருந்தன. ஏனோ, இடையில் புகுந்த சிலர் கொச்சைத்தமிழைப் புகுத்தி விட்டனர். மேலும் ஆங்கிலமும் கலந்து, தூயத்தமிழென்பது மருந்தளவிலும் இல்லாமல் செய்துவிட்டனர். மேலும் பத்திரிகை ஊடகங்களிலும் கதை, கட்டுரை போன்றவற்றில் கூட கொச்சைத்தமிழ் வழக்கில் வந்துவிட்டன. திரைப்படங்களின் காலக்கட்டத்தை மூன்று வகையாக பிரிக்கலாம் தொடக்கத்தில் வடமொழி மிகுந்த தமிழைத்தான் ஆண்டனர். பிற்பாடு திராவிட இயக்கங்களின் புண்ணியத்தால் தூயத்தமிழ் புலப்படத் தொடங்கியது. அது இடைக்காலம். தற்காலத்தில்தான் திரைப்படங்களில் தமிழின் அவலத்தை கண்கூடாகவே காண்கிறோம்.

தூயத்தமிழென்றதும் எளியோர் புரிந்து கொள்ள முடியாத செய்யுள் நடை தமிழை நினைத்து கலங்க வேண்டாம். எளிய தமிழை பயன்படுத்தினாலும் தமிழ் தமிழ்தான். அதாவாது ஆங்கிலம் மற்றும் பிறமொழி கலப்பின்றி பயன்படுத்தினாலே தமிழ் தூய்மைப் படுத்தப்படும்.

இசைத்தமிழென்பதும் பெரும்பாலும் திரைப்படத்துறையையே சார்ந்துள்ளது. கான சபைகளிலோ தெலுங்கு கீர்த்தனைகள்தான் மிகுந்துள்ளன. கோயில்களிலோ தமிழிலும் அர்ச்சனைச் செய்யலாம் என்ற அளவிற்கு தமிழுக்கு சலுகை அளித்துள்ளார்கள். அதனால் இசைத்தமிழை திரைப்படங்களின் வாயிலாகவே நாம் அனுபவிக்கிறோம்.

மனித நாக்கினால் என்னென்ன விதமான ஒலிகள் எழுப்ப முடியும் என்ற ஆராய்ச்சியின் விளைவாகவே உள்ளது இன்றைய திரைப்பட பாடல்களின் வரிகள். கருத்து செரிவற்ற வெற்று சொற்களின் கோர்வையாகவும் ஆகிவிட்டது இசைத்தமிழ்.

இதனால் இன்றையத் தலைமுறையினர் தமிழ் தெரியாது என்று தமிழகத்திலேயே தற்பெருமை பேசி திரிகின்றனர். தூயத் தமிழென்பதே எங்கும் காணோம், எதிலும் காணோம். இன்றைய திரைப்படங்களில் தூயத்தமிழென்பது நகைச்சுவைக்கு உரியதாகி விட்டது. இன்று தூயத்தமிழானது தமிழக தமிழர்களைத் தவிர்த்து மற்ற தமிழர்களால் அதிகம் நேசிக்கப்பட்டும் பூசிக்கப்பட்டும் வருகிறதென்றால் அது மிகையல்ல.

தமிழார்வலர்கள் இதனை சற்று சிந்தித்து பார்ப்பது நலம். இவ்வாறு இன்று நாம் முத்தமிழிலும் மொத்தமாக சேற்றைவாரி இறைப்பது ஏன்? 

- த.வெ.சு.அருள் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It