ltte doctorsசிங்கள, இந்திய உளவுப் பிரிவுகளின் கைக்கூலிகள் தொடர்ந்து விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாக சித்தரித்து வருகிறார்கள். தங்களது புனைவுக் கதைகள் மூலம் இழிவுபடுத்தி வருகிறார்கள். அந்த கட்டுக் கதைகளை அப்படியே உள்வாங்கி வாந்தி எடுக்கும் ஒரு கும்பல் உருவாகி வருகிறது.

மறுபக்கத்தில் சீமான் போன்ற கதைச் சொல்லிகள் புலிகளின் நிழலில் ஒதுங்கி தனக்கு விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள்.

"புலிகள் எங்கள் குலசாமிகள்" என்று புலிகளுக்கு புனித பிம்பம் கொடுத்து புலிகளின் வரலாற்றை இருட்டடிப்பு செய்கிறார்கள். அதனால் புலிகளின் வரலாறு பற்றி அதிகம் பேச வேண்டியுள்ளது.

மருத்துவக் கட்டமைப்பை புலிகள் இயக்கம் உருவாக்கியது பற்றியும், காலரா பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்தியது பற்றியும் காண்போம்.

இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய் வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும் போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது.

போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப் படுவதும், துன்புறுத்தப் படுவதும் வழக்கமாகியது. இதனால் போராளிகளை மருத்துவம் கற்பித்து மருத்துவப் போராளிகளாக்குவது ஆரம்ப நாட்களிலேயே தொடங்கப் பட்டுவிட்டது.

போராட்டம் வளரும் போது எழும் தேவைகளுக்கேற்ப மேலதிக கற்கைகள், பயிற்சிகள் படிப்படியாக சேர்க்கப் பட்டதோடு மருத்துவப் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களும் போராளிகளாக இணைந்துக் கொண்டு போராடிக் கொண்டே கற்கையை முடித்தனர்.

இப்படி புலிகளின் மருத்துவப் பிரிவு தோற்றம் கண்டது. விடுதலைப் புலிகளின் மருத்துவத் துறையில் போராளிகளில் இருந்து மருத்துவப் பட்டதாரிகளை உருவாக்குவதற்காக தமிழீழ மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டது.

போர்களிலும் இடம் பெயர்வுகளிலும் தமது மருத்துவ சேவைகளை ஏனைய மருத்துவர்களோடு இணைந்தவாறும் தேவைக்கேற்ப மருத்துவப் போராளி அணிகளைக் கற்பித்து விரிவடைந்தவாறும் தமிழீழ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவர்களாக உருவெடுத்தனர்.

1996-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 5 லட்சம் மக்களை சந்திரிகா அரசு வெளியேற்றியது. வன்னியின் குறுகிய நிலப்பரப்பில் மக்களும் போராளிகளும் குடியேறும் நிலை ஏற்பட்டது.

வன்னிப் பிரதேசத்தில் இலங்கை அரசினால் பொருளாதாரத் தடைகளும், மருத்துவத் தடைகளும் விதிக்கப்பட்டிருந்தன. ரத்தக் காயங்களைக் குணப்படுத்த சானிடரி நாப்கின் பஞ்சுகளைப் புலிகள் பயன்படுத்தக்கூடும் என்பதால் சானிடரி நாப்கின்களைக் கூட தடை செய்திருந்திருந்தார்கள்.

இப்படியான இக்கட்டான சூழலில் 1998-ஆம் ஆண்டு முதல் காலரா நோயாளி இனங் காணப்பட்டார். புலிகளின் சுகாதாரப் பிரிவும், மருத்துவப் போராளிகளும் உடனே களத்தில் இறங்க பணிக்கப்பட்டார்கள்.

“வாந்திபேதி” என்றும் கூறப்படும் அதன் தாக்கம் உடனடியாகவே பரவி வன்னி முழுவதையும் மட்டுமல்ல புலிகளின் கட்டுப்பாட்டு நிலைகளையும் தாண்டி, இலங்கையையும் தாக்கி அழிக்க கூடியவாறு பரவும் அபாயம் கொண்டது.

உடனடியாக இதை தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பும், அதே வேளை பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் காக்க வேண்டிய இரட்டைச் செயற்பாட்டை அவர்கள் செய்ய வேண்டிய சூழல். அதே நேரம் வேறு பிரதேசங்களில் இந்த நோய்த்தாக்கம் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டி இருந்தது.

அக்கராயன், மல்லாவி, புதுக்குடியிருப்பு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் நிறுவப்பட்டன. ஒலிப்பெருக்கியில் நோயைப் பற்றி அனைத்து ஊர்களிலும் புலிகள் அறிவுறுத்தினார்கள்.

படைக்கு ஆள் சேர்க்கும் கொள்கை முன்னெடுப்பு பிரிவு வாகனங்கள் ஒலிப் பெருக்கிகளைக் கட்டி ஊர்களில் அலைந்தன. நோய் அறிகுறிகள் பற்றியும், தடுப்பு முறைகள் பற்றியும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தார்கள்.

தெருக்கூத்துக் கலைஞர்கள் போர்க் கூத்துக்குப் பதிலாக நோயின் தாக்கம், அலட்சியத்தின் விளைவு, தடுப்பு முறைகள் பற்றி கூத்து தயாரித்து பேருந்து நிலையங்கள், கோவில்கள், சந்தைகளில் கூத்து போட்டார்கள். புலிகளின் நிர்வாகப் பிரிவுகள் அத்தனையும் நோயை அடக்கும் பொருட்டு திருப்பி விடப்பட்டன.

நோயாளர்கள் எங்கே மலம் கழித்தார்கள், எங்கே கழுவினார்கள், எங்கே போனார்கள், எங்கே சாப்பிட்டார்கள் என அனைத்து விவரங்களும் துல்லியமாக திரட்டப்பட்டன.

நோயாளர்கள் ராணுவ விசாரணை போல விசாரிக்கப்பட்டார்கள். விசாரணைத் தகவல்களைக் கொண்டு செயல்படை செயலில் இறங்கியது. நோய்த்தாக்கம் கண்ட ஊர்களை முற்றுகையிட்டது புலிகளின் மருத்துவச்சேவை.

அவசியமின்றி ஊரிலிருந்து வெளியேயும், வெளியிலிருந்து உள்ளேயும் யாரும் செல்வத்தைத் தடுத்து விட்டார்கள். ஊரில் அனைத்து வீடுகளிலும் மலசலக் கூடம் இருக்கிறதா என்று கவனித்தார்கள்.

யாரும் வெளியே மலம் கழிக்கக்கூடாது, குழந்தைகளைக் கூட அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப் பட்டார்கள். மலசலக் கூடம் இல்லாத வீடுகளில் தமிழீழ நிர்வாகச் சேவை மலசலக் கூடம் அமைத்துக் கொடுத்தது.

போராளிகளும் ஊர்மக்களும் ஊரைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள். நோயாளி அணிந்த உடைகள் எரிக்கப்பட்டன. நோயாளி சென்று உணவருந்திய உணவகங்கள் மூடப்பட்டன.

நோயாளிகள் சென்று வந்தப் பாதைகளில் எச்சரிக்கைப் பலகைகள் நடப்பட்டன. நோயாளிகள் மலம் கழுவிய குளங்கள், வாய்க்கால்கள் உடனடியாக தடைச் செய்யப்பட்டன.

நீர்த் தேவைகளுக்கு தமிழீழ நிர்வாகச்சேவை நீர்வழங்குத் தாங்கிகளைப் பயன்படுத்தியது.

புலிகள் அரசு அதிகாரியை (இலங்கை அரசின் பிரதிநிதி) அரசிடம் மருந்துக்கு விண்ணப்பிக்குமாறு அவசரமாக கொழும்புக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் அரசு அதிகாரி வெறுங்கையோடு திரும்பி வந்தார்.

குறைந்தபட்சம் ஆன்ட்டி - பாக்டிரியா மற்றும் சேலைன் (குளுக்கோஸ்) கூட தர மறுத்துவிட்டார்கள். இயக்கம் தன் மருத்துவப் பிரிவிலிருந்து அரசு மருத்துவ மனைகளுக்குச் சேலைன் கொடுத்தார்கள். மேலும் தேவைகளை சமாளிக்க அரசியல் பிரிவினர் செவ்விளநீர் சேகரித்து மருத்துவ மனைகளுக்கு அனுப்பினார்கள்.

அரசு அதிகாரி வெறுங்கையோடுத் திரும்பி வந்ததையும், செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச நிறுவனங்கள் பாராமுகம் காட்டியதையும் புலிகள் வேறு கோணத்தில் பார்த்தார்கள். போரில் வெல்ல இயலாத அரசு கிருமிப் போரைத் தொடுத்துப் பார்க்கிறதோ என்று எண்ணினார்கள்.

அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து வந்த நபரிடமிருந்துதான் நோய்த் தொற்று முதலில் இருந்தது பின்னர் கண்டறியப்பட்டது. புலிகளின் நிர்வாகம் மற்றும் மருத்துவப் பிரிவுகளின் தீவிர செயல்பாடுகளால் 1999-ஆம் ஆண்டு காலரா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்தது.

இவ்வாறாக ஒரு போராட்ட இயக்கத்தினால் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட நடைமுறை அரசானது விடுதலை அடையும் பட்சத்தில் ஆசியக் கண்டத்தில் உள்ள பல தேசிய இனங்களின் எழுச்சி வழிவகுக்கும்.

அதனால் எந்த விசயத்திலும் ஒரே நிலைப்பாட்டில் நிற்காத இந்தியா - சீனா - பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகள் தமிழீழ அழிப்பில் ஒரே நிலைப்பாட்டில் நின்றார்கள். புலிகளை அழித் தொழித்த பின்னரும் கட்டுக்கதைகளைப் பரப்பி வருகிறார்கள்.

அதையும் தாண்டி புலிகளின் நேர்மையும், லட்சியமும், தியாகமும் அவர்களை வரலாற்றில் நிலைத்து நிற்கச் செய்யும்.

தகவல் உதவி: 'போருழல் காதை' நூல்

- குருநாதன் சிவராமன்

Pin It