berlin_cinema'இவ்வருடம் பெப்ரவரி மாதம் 5ம் திகதி தொடக்கம் 15ம் திகதி வரை ஜேர்மனியின் தலைநகரான பேர்லினில் ‘பேர்லினால’ எனப்படுகின்ற பேர்லின் சர்வதேசத் திரைப்படவிழாவின் 59வது தொடர் நடைபெற இருக்கின்றது. இவ்விழாவில் பிரான்ஸில் இருக்கும் ரவீந்திரன் பிரதீபன் அவர்களின் இயக்கத்தில் உருவான ‘என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்’ என்கின்ற குறும்படம் நான்கு தடவைகள் திரையிடப்பட இருக்கின்றது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களில் இருந்து பதினொரு படங்கள் மட்டுமே போட்டிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ‘என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்’ குறும்படமும் இத் தெரிவுக்குள் அடங்குகின்றது. இக் குறும்படமானது பிரான்ஸில் இருந்து வெளிவருகின்ற உயிர்நிழல் சஞ்சிகையை வெளியிடும் எக்ஸில் வெளியீட்டகத்தின் இணை அமைப்பான அஎக்ஸில் இமாஜ்ஞ ‘Exil Image’ இனால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இக் குறும்படமானது இலங்கையின் போர்ச் சூழலில் நடைபெறுகின்ற ஆட்கடத்தல், சிறுவர்கள் போராளிக் குழுக்களில் சேர்க்கப்படுதல், பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள்மீதான பாலியல் வன்முறை, உக்கிரமடைந்து வருகின்ற போர் மற்றும் மனித விழுமியங்களின் அழிப்பு போன்றவற்றை நுணுக்கமாகக் குறியீடுகளுடன் சொல்லிப் போகின்றது. இக் குறும்படம் ஒரு தலைமுறையின் சிதைக்கப்பட்ட கனவுகளைப் பேசுகின்றது.

‘பேர்லினால்’ திரைப்படவிழாவானது 1951ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 5 இலட்சம் பார்வையாளர்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். ஆண்டு தோறும் இவ்விழாவில் 125 நாடுகளைச் சேர்ந்த 16000 திரைப்படத்துறை நிபுணர்கள் மற்றும் 82 நாடுகளைச் சேர்ந்த 4000க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவிற்கான போட்டியில் வெற்றி பெறும் முதலிரண்டு முழுநீளத் திரைப்படங்களுக்கும், முதலிரு குறும்படங்களுக்கும் தனித்தனியே ‘தங்கக் கரடி’, ‘வெள்ளிக் கரடி’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. ‘கரடி’ பேர்லின் நகரத்தின் சின்னமாகும். இத் திரைப்படவிழாவின் 59 வருடகால வரலாற்றில் போட்டித் தெரிவு பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் இது என்பதும் முக்கியமானது.

மிருணாள் சென், சத்யஜித்ரே, அடுர் கோபாலகிருஷ்ணன், ஆனந்த் பட்டவர்த்தன், விஸ்வநாதன், மீரா நாயர், மணிரத்னம் போன்ற இயக்குநர்களை இவ்விழா கெளரவித்திருக்கின்றது. மேலும் இவர்களில் சிலர் தேர்வு நடுவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இன்றைக்கு இலங்கையில் நிலவுகின்ற நெருக்கடியான காலகட்டத்திற்கு ஏற்ற கருவை உள்ளீடாகக் கொண்டிருப்பது இக்குறும்படத்தின் சிறப்பம்சமாகும்.

திரையிடல் விபரங்கள் வருமாறு:
வெள்ளிக்கிழமை 06.02.2009 - 22:00 மணிக்கு
CinemaxX 3
Potsdamer Platz, Potsdamer Strae 5, 10785 Berlin, Germany
U/S-Bahn: Potsdamer Platz
.......................................................................

ஞாயிற்றுக்கிழமை 08.02.2009 - 17:30 மணிக்கு
Collosseum
Schய்nhauser Allee 123, 10437 Berlin, Germany

U/S-Bahn: Schய்nhauser Allee
.......................................................................

செவ்வாய்க்கிழமை 10.02.2009 - 16:00 மணிக்கு
(இக் காட்சி சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே காண்பிக்கப்படுகின்றது)
CinemaxX 6

Potsdamer Platz, Potsdamer Strae 5, 10785 Berlin, Germany
U/S-Bahn: Potsdamer Platz
.......................................................................

சனிக்கிழமை 14.02.2009 - 22:00 மணிக்கு
CinemaxX 3
Potsdamer Platz, Potsdamer Strae 5, 10785 Berlin, Germany
U/S-Bahn: Potsdamer Platz
மேலதிக விபரங்களுக்கு : (
http://www.uyirnizhal.com/mangotree.html)
Pin It