தமிழக சமூகநலத்துறை அமைச்சர் பூங்கோதை ராஜிநாமா செய்திருக்கிறார். முதல்வர் கருணாநிதி இந்தத் தகவலை சட்டசபையில் தெரிவித்தார். லஞ்ச வழக்கில் சிக்கிய உறவினர் ஜவகரைக் காப்பாற்ற ஏடிஜிபியுடன் அமைச்சர் பூங்கோதை சிபாரிசு செய்து பேசியதாக ஆதாரத்துடன் சிடி வெளியாகியிருந்தது.

"ஜவஹர் ஒரு துரதிர்ஷ்டசாலி. அவர் குடும்பம் அவர் வருமானத்தை நம்பித்தான் உள்ளது. இந்த வழக்கில் அவர் மீது கடும் நடவடிக்கை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். வழக்கை மின்வாரியத்துக்கு மாற்றிவிடுங்கள். பிறகு அவர்கள் கவனித்து கொள்வார்கள்," என்று அமைச்சர் பூங்கோதை பேசியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

"லஞ்சம் வாங்கிய தனது உறவினரை பாதுகாக்கும் முயற்சியில் அமைச்சர் ஒருவரே ஈடுபட்டிருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்காக நான் வெட்கப்படுகிறேன்," என்று முதல்வர் கூறியிருக்கிறார்.

"அதிகாரத்தை செலுத்த வேண்டும் என்ற உள்நோக்கம் எனக்கில்லை. பரிந்துரைத்தது தவறு என்று இப்போது உணர்கிறேன்," என்று தனது ராஜிநாமா கடிதத்தில் பூங்கோதை தெரிவித்துள்ளதாகவும் செய்தி.

நிற்க...

மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன்களான டி.ஆர்.பி. செல்வக்குமார், கிங்ஸ் இந்தியா பவர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தையும், டி.ஆர்.பி. ராஜ்குமார் கிங்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களில் டி.ஆர்.பாலுவின் இரு மனைவியரான டி.ஆர்.பி பொற்கொடி, டி.ஆர்.பி. ரேணுகா தேவி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு சலுகை விலையில் காஸ் சப்ளை செய்வதாக எழுந்த புகார் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சினை என்னவென்றால், தனது மகன்களுக்குச் சொந்தமான மேற்கண்ட இரு நிறுவனங்களுக்கும் சலுகை விலையில், நரிமணம் மற்றும் குத்தாலத்திலிருந்து இயற்கை எரிவாயுவை சப்ளை செய்ய டி.ஆர்.பாலு ஓ.என்.ஜி.சி மற்றும் கெய்ல் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார் என்பதுதான்.

"ஏராளமான தொழிலாளர்களின் நலன்கள், அவர்களின் எதிர்கால வாழ்க்கை ஆகியவற்றை கருத்திற்கொண்டும், பங்குதாரர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்கும் நோக்கத்திலும் இப்பிரச்சினையை பெட்ரோலிய அமைச்சர் முன்பாக எடுத்து வைத்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது?" இது அமைச்சர் டி.ஆர்.பாலுவின் வாதம்.

முன்பு இது பற்றி செய்தி வெளியானபோது, முழுமையாக மறுத்துவிட்ட டி.ஆர். பாலு, இப்போது "ஆமாம், பேசினேன். என்ன தவறு?' என்று ராஜ்ய சபையில் கேட்டிருக்கிறார். கழக அமைச்சர் டி.ஆர். பாலுவின் முறைகேடு, அவரே ஒப்புக்கொண்டு விட்ட நிலையில், மத்திய அரசாலும், பிரதமராலும், மேல் சபையினாலும் மூடி மறைக்கப்படுகிறது. இருகட்சிகளின் ஆட்சியிலும் எரிவாயு சப்ளை பெற டி.ஆர். பாலு முயன்றிருக்கிறார். அதில் முன்னேற்றம் கண்டிருக்கிறார். தி.மு.க. ஆதரவு என்பது, சில வர்த்தக சமாச்சாரங்களை ஒட்டியதே என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.

நிற்க...

மதுரை உசிலம்பட்டி அருகே இருக்கிறது உத்தப்புரம் கிராமம். இங்கே 1989ம் ஆண்டு பெரும் ஜாதிக் கலவரம் ஏற்பட்டது. இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து தலித் மக்களும், பிற சமூகத்தினரும் பிரித்து வைக்கப்பட்டனர் - ஒரு சுற்றுச் சுவரால்.

ஜாதி துவேஷத்தை வளர்க்கும் இந்தச் சுவரை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக அங்கு எழுந்தது. இதை வலியுறுத்தி சிலர் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர். இதனால் மீண்டும் ஜாதிக் கலவரம் ஏற்படுமோ என்ற பீதி அங்கு எழுந்துள்ளது. சர்ச்சைக்குரிய சுவர் அண்மையில் இடிக்கப்பட்டது.

உத்தபுரம் தடுப்புச் சுவர், கடந்த 18 ஆண்டுகளாக இருந்துள்ளது. இது ஒரு அவமானச் சின்னமாகும். சாதிப் பிரச்சனைகளுக்கு அடிப்படையாக இருந்த இந்த சுவரின் ஒரு பகுதி தற்போது தான் அகற்றப்பட்டு உள்ளது. செய்திகளைப் படித்தவுடன் எனக்குக் கொஞ்சம் குழப்பம்.

"அமைச்சர் பூங்கோதை உறவுக்காரருக்கு உதவப் போய் அமைச்சர் பதவியைவிட்டு இறங்கிப் போயிருக்கிறார்."

"அமைச்சர் பாலு கூட உறவுக்காரர்களுக்குதான் உதவி செய்திருக்கிறார். ஒண்ணுமே ஆகலியே?"

"உத்தப்புரத்து புண்ணியவான்கள் கல்லாலும், மண்ணாலும் ஒரு சுவற்றைக்கட்டி வெறுப்பைக் காட்டியிருக்கிறார்கள். பத்தொன்பது வருடங்களாக. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத புண்ணியவான்கள்!"

"இன்னும் எத்தனையோ ஊர்களில் கல்லும் மண்ணும் இல்லாமல் மனதிற்குள்ளேயே கட்டியிருக்கும் சுவர்களை எப்போது இடிக்கப் போகிறார்கள்?"

பிறந்த நாள் கொண்டாட்டமெல்லாம் வேண்டாமென்று முதல்வர் சொன்னதில் ஏதோ எரிச்சல் இருப்பதாக எனக்குத் தெரிந்தது.

முட்டையையை கோழி போட்டது என்று எழுதினாலும், கோழி முட்டை போட்டது என்று எழுதினாலும் எரிச்சல் என்னவோ கோழிக்குத்தான். முட்டை போட்ட கோழிக்குத்தான் அந்த எரிச்சல் தெரியும்.

இன்று அமைச்சர் பூங்கோதை முட்டையை அவித்துச் சாப்பிட்டிருக்கிறார். நேற்று அமைச்சர் டி.ஆர்.பாலு முட்டையை ஆம்லெட் போட்டுச் சாப்பிட்டிருக்கிறார். வேறொருத்தர் ஆஃப் பாயில் போட்டுச் சாப்பிட்ட விவகாரம் நாளைக்கு வெளியில் வரலாம் அல்லது வராமலேயே போகலாம்.

எனக்கு ஒரு கூட்டாளி இருக்கிறான். பெயர் சத்யமேவ ஜயதே. அரசாங்க உத்தியோகம். வடநாட்டுக்காரன். அவனைக் கேட்டால் தெளிவாகச் சொல்லுவான். கேட்டுப் பார்க்கலாமென்று அவனைத் தேடிப் போனேன். வெள்ளை அம்பாசிடர் கார்தான் அவனுக்கு வீடு. 'பம்பரி'ல்தான் அவனுடைய குடியிருப்பு. தேடிப் போனபோது வீட்டில் அவன் இல்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் அம்மணி மட்டும்தான் அங்கே இருந்தார். வீட்டிற்குள்ளிருந்து குரல் வந்தது. "சத்யமேவ ஜயதே" மெடிகல் லீவில் இருக்கிறார். போயிட்டு அப்புறம் வாருங்கள்." 

- மு.குருமூர்த்தி

Pin It