முந்தைய கட்டுரையில் சீனா உற்பத்தித் துறையில் போட்டியில்லாத வளர்ச்சி அடைய எடுக்கும் செயல்பாடுகள் பற்றி பார்த்தோம். இந்தப் பதிவில் அமெரிக்காவின் ஒட்டு மொத்த நிதித்துறை செயல்பாடுகளும் எவ்வாறு ஒரு சில கம்பெனிகளுக்குப் போய் கொண்டிருக்கிறது மற்றும் அதனால் ஏற்பட கூடிய விளைவுகள் பற்றியும் பார்ப்போம்.

தற்போதைய நிதி நெருக்கடி வந்தபோது அமெரிக்கா எங்கும் பேசபட்டது 'Too Big to Fall'. அதாவது மிகப் பெரிய நிறுவனங்கள் வீழ்ந்தால் அதன் பாதிப்பு அதிகமாக இருப்பதால், அவர்கள் தவறு செய்து வீழ்ந்தாலும் காப்பாற்றப்பட்டே ஆக வேண்டும் என்பது தான். நிதி நெருக்கடியிலிருந்து எழும் முன்னே தற்போது அமெரிக்க நிதி நிறுவனங்கள் நிலையைப் பார்ப்போம்.

கடந்த சூன் மாதம் பாங்க் ஆப் அமெரிக்கா, வெல்ஸ் பார்கோ மற்றும் ஜெ.பி. மார்கனிடம் மட்டும் 30 சதவிதத்துக்கும் மேலான அமெரிக்க டெப்பாசிட்டுகள் உள்ளன. இந்த மூன்று வங்கிகள் மற்றும் சிட்டி வங்கி ஆகியவையிடம் 50 சத மார்ட்கேஜ் பத்திரங்களும் மூன்றில் இரு கிரடிட் கார்டுகளும் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் நிதி நெருக்கடியின் போது பிரச்சனையில் உள்ள வங்கிகளை பெரிய வங்கிகள் வாங்கியது தான். கடந்த இரு வருடத்தில் பாங்க் ஆப் அமெரிக்கா 138%, ஜெ.பி.மார்கன் 51% மற்றும் வெல்ஸ் பார்கோ 43% வளர்ந்து உள்ளது. அமெரிக்க அரசு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட சதவிதத்திற்கு மேல் டெபாசிட் வைக்க கூடாது என்று போட்டியை ஊக்கப்படுத்த வைத்துள்ள கட்டுப்பாட்டையும் மீறி இவ்வங்கிகள் வளர்ச்சி அடைந்து உள்ளன.

பொருளாதார மந்த நிலையிலேயே இந்த வளர்ச்சி என்றால் பொருளாதாரம் நல்ல நிலைக்கு வரும்போது அதன் வளர்ச்சியைப் பற்றி நினைத்துப் பாருங்கள். அது மட்டுமன்றி இந்நிறுவனங்களின் வளர்ச்சி மிகப் பெரியதாகி விட்டதால், இனி எக்காலத்திலும் இவற்றிற்கு அழிவு ஏற்படப் போவது இல்லை என்ற நிலை ஏற்படும். ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் தான் அரசு காப்பற்றி ஆக வேண்டுமே! அதன் விளைவு, எந்த பயமும் இல்லாமல் முதலீட்டாளர்கள் நிறுவனங்களுக்கு தைரியமாக பணத்தை அள்ளிக் கொடுப்பார்கள். சிறு மற்றும் குறு நிதி நிறுவனங்களுக்கு முதலீடு கிடைப்பது குதிரைக் கொம்பாகும். எனவே பிற நிறுவனங்கள் அழிந்து விடும் அல்லது இப்பெரிய நிறுவனங்கள் அவற்றை வாங்கி விடும். இப்பெரும் நிறுவனங்கள் மிகவும் அசாதாரமான வளர்ச்சி அடையும்.

மற்ற உற்பத்தித் துறைகளில் ஒரு சிலரது ஆதிக்கம் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் நிதி துறையின் பங்கு உலகில் விரல் விட்டு எண்ண கூடிய ஒரு சிலரது கைக்கு சென்றால் அதன் விளைவு கடுமையானதாக இருக்கும்.அது மட்டுமன்றி உலகில் பெரும்பான்மையான கடன்கள் கொடுக்கும் அதிகாரம் ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டும் இருந்தால் உலக சந்தையில் எந்தத் துறையில் எந்த நிறுவனம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதும் ஒரு சிலரால் நிர்ணயிக்கப்படும்.போட்டிகள் குறைந்தால் சாதாரண மக்களுக்கும் அவர்களுக்கு சாதகமான வட்டி மற்றும் பிற காரணிகளில் கடன் கிடைப்பது கடினம். தற்போதைய சூழ்நிலையிலேயே பங்கு வர்த்தகத்தில் சர்வ சாதாரணமான ஏற்ற இறக்கத்தை இந்நிறுவனங்கள் ஏற்படுத்துகின்றன.இந்த நிறுவனங்களின் வளர்ச்சி மிக அதிகமானால், இந்த நிலை மோசமாகும்.வளரும் நாடுகளின் பொருளாதார ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகும்

இது போல் ஒரு சில நிறுவனங்கள் உலகப் பொருளாதாரத்தின் பெரும் பங்கை ஆட்டி வைக்கத் தொடங்கினால் அதிகாரம் எந்த அளவுக்கு அரசுகள் கையில் இருக்கும் என்பது சிந்திக்க வேண்டிய செய்தி.அப்படியே பணத்தை உருவாக்கும் அதிகாரமும் பெரிய நிறுவனங்களுக்குப் போய் விட்டால்?!

- சதுக்கபூதம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It