மதில் மேல் யாராகவோ வீற்றிருக்கும் நாம் பெரும்பாலும் எப்பக்கமும் குதித்து விடுவதில்லை.

எனக்கு இரண்டு வயது இருக்கும்போது அணிந்திருந்த ஸ்வெட்டர் இன்னும் வைத்திருக்கிறேன். அது என் பாட்டி (அப்பாவின் அம்மா) தன் கையாலேயே பின்னிய பச்சை வண்ண ஸ்வெட்டர். கொஞ்சம் அதிகப்படியாகத்தான் இருக்கும். ஆனாலும் எனது சிறு குழந்தை வாசத்தை இன்னமும் அதில் நான் உணர்கிறேன். அதில் என் பாட்டியின் வாசமும் கலந்திருப்பதை என்னால் யூகிக்க முடிகிறது.

cat tshirtஅதன் பிறகு ஐந்து ஆறு வயதில் ஒரு பச்சை வண்ண குரங்குத் தொப்பி வைத்திருந்தேன். எப்போது பனி அடிக்கும் என்று காத்திருந்து போட்டுக் கொண்டு பக்கத்து வீட்டில், வீதிகளில் விளையாடுவது அப்படி இருக்கும். என் அடையாளமே பச்சைத் தொப்பி என்ற காலமும் உண்டு. ஒரு ரெயின் கோட்டு கூட வைத்திருந்தேன். அதற்கு ஜிப் போடத் தெரியாமல் என் ஆத்தா (அம்மாவின் அம்மா) என்னை மழைக்குள் அதன் சேலை தலைப்பை என் தலையோடு மூடிக் கொண்டு மேல் வீட்டு சின்னப்பண்ணன் அக்கா வீட்டுக்காரரிடம் சென்று ஜிப்பை போடச் செய்து தூக்கிக் கொண்டு வந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் சிரிக்கும் வெகுளியான என் ஆத்தா இறந்து 34 வருடங்கள் ஆகி விட்டன. ஆத்தா இறந்த அன்று வீட்டில் பரணில் அடிப்புறத்தில் நாலரை வயதில் நான் சாக்பீஸால் கிறுக்கிய சில வார்த்தைகள் இன்றும் அழியாமல் இருக்கின்றன. மரணங்கள் அழித்துப் போவது உடல்களை மட்டும் தான். அதையும் தாண்டி சொல்லொணா ஒன்று நம்மிடையே உலவுகிறது. அது தான்... இங்கே கிடக்கும் மிச்ச வாழ்க்கை.

அதே கால கட்டத்தில் பூனை படம் போட்ட ஒரு பனியன் வைத்திருந்தேன். அதை போட்டுக் கொண்டு வீதியில் விளையாடுகையில்.... போவோர் வருவோர் எல்லாம், 'இந்த பூனை கத்துமா...?' என்று கேட்டு மியாவ் என சத்தமிட்டு என் வயிற்றைப் பிராண்டுவது போல பாவனை செய்து விட்டு போனதெல்லாம் மனதுக்குள் பூக்கள் பிராண்டும் காட்சிகள். இன்னமும் எங்கிருந்தோ வரும் பூனை சத்தங்கள் இசைக்கத் தெரிந்தவை. நான் மதில்களை இப்போதும் ஆசையாய் வெறித்துப் பார்க்கிறேன். அதன் மீது நான் யாருமற்று நானுமற்று நடந்து பார்க்கிறேன்.

இன்று டாக்கிங் கேட்-ஐ வைத்துக் கொண்டு பையன் விளையாடுகையில்.... பூனையைப் போல... கால மதிலில் தவித்திருக்கிறேன். விர்சுவல் பூனையைப் பிராண்டி பார்க்கிறேன். அது ஏற்கனவே பதியப்பட்டதுக்கு தகுந்த பாவனைகளை மட்டுமே செய்கிறது. பனியனில் பூனை வளர்க்கத் தெரிந்த எனக்கு கணிப்பொறி திரையில், அலைபேசி திரையில் பூனை வளர்க்கத் தெரியவில்லை. என்னை நானே பிராண்டிக் கொண்டு திரியும் சப்தமற்ற தனிமையை யாருக்கும் காட்டி விடத் தோன்றாத போதும் தானாகவே எட்டிக் குதித்து விடும் நினைவுப் பூனையை நான் தடுப்பதுமில்லை.

அதே கால கட்டத்தில், நடந்தால் கீ கீ என்று சத்தமிடும் ஷூ ஒன்றும் வைத்திருந்தேன். மணி ஓசை வரும் முன்னே யானை வரும் பின்னே என்பது போல நான் வீட்டில் எங்கு சென்றாலும் அந்த கீ கீ ஓசை முன்பே சென்று விடும். அள்ளி அணைத்திடும் அழகியலோடு செல்ல நடைக்குப் பின்னணி இசையாக அச்சத்தம் இருக்கும். அச்சத்தத்தில் தான் நான் இருக்கிறேன் என்று பாட்டி தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும். அந்த கால கட்டத்தில் அது ஒரு பேஷனாகவே, பழக்கமாகவே இருந்தது. தத்தி தத்தி நடக்க ஆரம்பித்தபோது எப்படி நடைவண்டி தேவையாய் இருந்ததோ, அது போல ஓரளவுக்கு நன்றாக நடக்கத் துவங்கியபோது பீப்பி சத்தம் வரும் ஷூ வாங்கி மாட்டி விடுவது ஒரு கடமையாகவே ஆகி இருந்தது. நான் மட்டுமல்ல, என் நண்பர்கள் எல்லார் காலிலும் அந்த பீப்பி ஷூ இருந்தது. அது இன்னமும் சப்தமிடுவதாக பசுமையாக நம்பிக் கொண்டிருக்கிறேன். நினைவுகளின் வெளி பாதங்களால் ஆனவை. வெளி வந்த ஒலி காற்றில் கரைவதில்லை. அது நகர்ந்து கொண்டே இருக்கும். அந்த பீப்பி சத்தமும் இப்போது எங்கேயாவது அலைந்து கொண்டுதானிருக்கும்.

நான் இன்னமும் நடந்து கொண்டு தானே இருக்கிறேன்...என்பது எனது ஆன்ம விதி. துருவேறிய அந்த சின்ன ஷூ மட்டும் ஆழ்ந்த மௌனத்தில் இருக்கிறது...என்பது விதிகளுக்கும் அப்பாற்பட்டவை.

நாஸ்டாலஜியா எனும் போது... அது பால்யத்தின் அல்லது நாம் எப்போதோ விரும்பிய, நேசித்த, பிடித்த எதுவோ ஒன்று அதன் காலத்தின் வண்ணத்தில் தன்னை ஒளித்துக் கொண்டு எங்கோ ஒரு மூலையில், எங்கோ ஒரு அறையில், எங்கோ ஒரு பரணில், எங்கோ ஒரு அடுக்கில் காலத்தை நிறுத்தி சலனமற்று தன்னை அடைகாத்துக் கொண்டிருக்கும் அற்புதங்களாகத்தான் நான் காண்கிறேன்.

நிறைய இருக்கிறது.

விளையாடிய கில்லியில் இருந்து ஒளிந்து விளையாடிய பொழுதுகள்... மீன் பிடித்த சனிகள்..... ஆற்றுக்கு நீராடச் சென்ற அனுபவங்கள்... கொய்யா மரத்தின் கிளை ஒடிந்து தொங்கிய கூக்குரல்கள்...பாம்பு விரட்டிப் பதுங்கிய காடுகள்.....ஒன்றாம் வகுப்பில் அணிந்த செருப்புகள்... ரேடியோ.... மூணு சக்கர வண்டிகள்....பெரிய சைஸ் சி.டி.யில் கேட்ட பாடல்கள்.....வில்லுகள்.... கோலிக் குண்டுகள்....யானை மிட்டாய்கள் என்று சொல்ல அத்தனை இருந்தும்... ஏனோ இந்த இடத்தில் நாஸ்டாலஜியாவை நிறுத்தத் தோன்றுகிறது. அளவுக்கு மிஞ்சினால் நினைவுகளும் அழுத்தம் தான் என்ற வகையில் கைவிடப்பட்ட கடைசி ரயில் பெட்டிக்குள் ஏதோ ஒரு ஊர் இருக்கிறது என்று நம்பிய பொழுதொன்றில் இத்தொடர் இங்கே தன்னை நிறைவு செய்து கொள்கிறது.

- கவிஜி

Pin It