மனதுக்குள் ஏதோ ஒரு பாடல் மட்டும் நம்மை பாடிக் கொண்டே இருக்கிறது...!
கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பின் என் சின்ன தாத்தா சாவுக்கு ஊருக்குப் போயிருந்தேன்.
எல்லாம் முடிந்த பிறகு... உள் அறையில் ஒரு ட்ரங்கு பெட்டி இருந்ததை எதேச்சையாகப் பார்க்க நேரிட்டது. பட்டென்று சரசரவென பிடித்த காட்டுத் தீ போல எனக்குள் காலம் எரியத் துவங்கியது. வேகமாய் எழுந்து சென்று பரபரவென மூளையை முந்திக் கொண்டு அந்த பெட்டியைத் திறந்தேன். உள்ளே தாத்தா வீட்டின் வேண்டாத பொருட்கள் போல ஏதேதோ இருந்தாலும்... என் கையில் கொஞ்சம் அழுத்தினாலும் நைந்து கிழிந்து விடும் நிலையில் ஒரு புத்தகம் போல பழுப்பு நிறத்தில் காகிதக் கொத்துகள். நூலால் சேர்த்துக் கட்டி ஓரங்கள் கிழிந்து மழிந்தும்... பூச்சி வாசத்தில்... கால நெடியோடு நான் உடல் நடுங்கப் பார்த்தது பாட்டுப் புத்தகங்கள்.
எனக்கு சிறு வயதில் அதாவது 9வதோ 10வதோ படிக்கையில் பாட்டுப் புத்தகம் வாங்கி சேர்த்து வைப்பது ஒரு பழக்கமாக இருந்தது. மிகவும் பிடித்தமானது கூட. நல்ல பாட்டுள்ள படங்கள் வந்தால் படம் பார்த்த கண்ணோடு புக்கை பொரிக்கடை முக்கில் இருக்கும் பாட்டுப் புத்தகக் கடையில் (பொரிக்கைடையின் ஒரு பிரிவு தான் ) 50 பைசா கொடுத்து அந்த பாட்டுப் புத்தகத்தை வாங்கி விடுவேன். இரவில் நானும் ரவி அண்ணனும் பாடிக் கொண்டிருப்போம். இன்னமும் சொல்லப் போனால் ஒவ்வொரு ஞாயிறு மாலையிலும் குபேரனின்(நண்பன்) பாட்டி வீட்டு வராண்டாவில் அமர்ந்து நான் ரவி அண்ணன்...சந்திரன்... இலக்கி......பிரபு (இறந்து விட்டான்) பாடுவோம். குபேரன் ஒரு இசையமைப்பாளனைப் போல கையை ஆட்டிக் கொண்டு தாள கதி சொல்லிக் கொண்டிருப்பான். சில நேரத்தில் இளையராஜா குரலில் அவனே பாடியும் விடுவான்.
பிரபாகரன் நன்றாக தாளமிடுவான். குடத்திலும் பானையிலும் அவன் அடிக்கும் அடிக்கு நான் மனோவின் குரலில் (அப்படி நினைத்துக் கொள்வதுண்டு அப்போது) பாட ஒவ்வொரு ஞாயிறு மாலையும் தந்தன தந்தன வாசம் தான். அப்போது ஒளிந்து ஒளிந்து பார்த்தபடி வேண்டுமென்றே கடைக்குப் போவது போல போயும் வந்தும் இருக்கும் நியந்தாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) எனக்கும் பாடல்களால் காதல் வந்த கதை தனிக்கதை.
எந்தக் கவலையும் இல்லாத ஆலாபனையின் உச்சியில் கொம்புகளோடு அலையும் சிறு குருவிகளின் துறுதுறு அந்தக் காலத்தில் எங்களுக்கு இருந்தது. எங்கெல்லாம் ஏறி இறங்குமோ அங்கெல்லாம் கூடிக் குறையும் குரல் அந்த கீச் கீச்சிலும் தேன் சொட்டும் சிந்தைக்கு சொந்தமாக இருந்தது.
அந்தப் பாட்டு புத்தகம்... இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் அந்தப் பெட்டியில் என்றாவது ஒரு நாள் நான் வந்து தொடுவேன் என்று தான் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தன்னை ஒளித்துக் கொண்டிருந்தது என்று தான் நம்பினேன். நம்பிக்கையின் பொருட்டு தான் வாழ்வின் அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. பழுப்பு வாசமும்.. கால வாசமும் என்னை திக்கு முக்காடச் செய்தது. நிரம்ப வாழ்ந்து 90 வயதில் இறந்த தாத்தாவுக்கு அழுததை விட அந்த பாட்டு புத்தகத்துக்காக அழுகை கூடியது எனக்கு. கிறுக்குத்தனங்களோடு பயணப்படுவதே என் பிழைப்பு.
அந்த பாட்டு புத்தகத்தை அந்த பெட்டிக்குள்ளேயே வைத்து விட்டு வந்து விட்டேன். ஏனோ அப்படி தான் விட்டு விடத் தோன்றியது. அந்த வயதை கலைக்க விரும்பவில்லை நான். கோவை வந்தும் வீடு வந்தும் அந்தக் கால கட்டத்தில் நான் அடிக்கடி பாடும் "பூவே உனக்காக" படப் பாடல்.... எனக்குள் அனிச்சையாய் அலை பாய்ந்தது.
"இதயங்கள் நழுவுது இதிலென்ன மாயம்....சுகமாய் வலிக்குது இது என்ன காயம்...."
"நீ தானே அன்பே என்றும் எந்தன் ஆகாயம்...நீ இன்றிப் போனாலே வாழ்வே பொய்யாகும்..."
இப்போது ஹம் பண்ணினாலும் எனக்குள் எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொள்கிறது அதே பழுப்பு நிறம். உங்களுக்கும் இப்படி ஒரு நிறம் இருக்கும்தானே....!
தொடரும்...
- கவிஜி