இந்திய நாடாளுமன்றத்தால் அமுல்படுத்தப்பட்ட இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி 1961 (Act 59/61) சட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள ஆறு நிறுவனங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் என்று 1961இல் அறிவிக்கப்பட்டன. சென்னை அய்.அய்.டியும் அப்படிப்பட்ட ஒரு நிறுவனமே. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசிடமிருந்து இந்நிறுவனங்கள் ஆயிரம் கோடி ரூபாய் பெறுகின்றன. சென்னை அய்.அய்.டி. 300 ஏக்கர் நிலப்பரப்பில் சென்னையில் கவர்னர் மாளிகைக்கு அருகில் அமைந்துள்ளது. சென்னையில் இந்த அய்.அய்.டி. அமைவதற்கான காரணம் முன்னாள் முதலமைச்சர் காமராசர் அவர்களே. தமிழ்நாட்டில் அய்.அய்.டி. இருந்தாலும் இங்குத் தமிழர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

அறிவியல் துறையில் உலகிலேயே முன்னணியில் உள்ள பார்ப்பனக் கோட்டையாக இந்த அய்.அய்.டி. மாறியுள்ளது. கடந்த 45 ஆண்டுகால வரலாற்றில் இயக்குநர்கள், டீன்கள் போன்ற முடிவெடுக்கும் தலைமைப் பதவிகளில் பார்ப்பனர்களே அமர்ந்து இங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இந்த நிறுவனத்திற்கு இயக்குநராக ஒரு தலித்தோ, ஒரு பிற்படுத்தப்பட்டவரோ வந்தது கிடையாது. சென்ற பத்தாண்டுகளில் மிகப்பெரும் அளவில் நடந்த பொருளாதாரக் குளறுபடிகளால் மற்றும் பொது நிதியைத் தவறான விதத்தில் கையாண்டதால் பத்திரிகைகள் மற்றும் பாமரமக்களின் கவனத்தை இந்த அய்.அய்.டி. ஈர்த்துள்ளது. ஆசிரியர் பதவிகளுக்கு நடந்த தேர்ச்சி முறைகளைப் எதிர்த்துப் பல ரிட்மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்டுச் சொல்லுவோமேயானால் கடந்த பத்தாண்டுகளில் 200 க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்த நிறுவனத்திற்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மனித உரிமை மீறல்கள்:

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டோருக்கும், தலித்துகளுக்கும் அரசியல் சட்டத்தால் கொடுக்கப்பட்டிருக்கிற இடஒதுக்கீடு (மனித உரிமை) இங்கே மாணவர் சேர்க்கையிலோ ஆசிரியர் தேர்விலோ கொடுக்கப்படுவதில்லை. இங்கே பணிபுரியும் மொத்த ஆசிரியர் எண்ணிக்கை 450 பேர் அதில் 2 பேர் தான் தலித்துகள் (இப்போது 4 பேர் என்பது கணக்கு). ஆனால், அரசியல் சட்டமோ 22.5% இடங்களைத் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு (குறைந்த பட்சம் 100 தலித்துகள் ஆசிரியர்களாகப் பணியாற்ற வேண்டிய இடத்தில் நான்குபேர் பணியாற்றுகிறார்கள்).

இங்கே பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் 50 பேர் தான். மற்ற ஆசிரியர்களோ உயர்சாதிக்காரர்கள். முக்கியமாகப் பார்ப்பனர்கள். ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் பதிவாகி நிலுவையில் கிடக்கும் வழக்குகளின் சில விவரங்கள்.

(W.P.No. 5415/ 95, W.P.No. 16528/95, W.P.No. 16863/95, W.P.No. 17403/95, W.P.No. 4242/97, W.P.No. 4256/97, W.P.No. 4257/97, W.P.No.37020/2003)

அரசியல் சட்ட ஆணையில் இருந்து தப்பிப்பதற்காக இந்த அய்.அய்.டி, காண்ட்ராக்ட் முறையிலும் (ஒப்பந்தமுறை) அடாக் (தற்காலிகம்) முறையிலும் ஆசிரியர்களை நியமனம் செய்து கொண்டிருக்கிறது. காலப் போக்கில் உயர்சாதியைச் சார்ந்த இந்த ஆசிரியர்களின் தற்காலிக வேலை, நிரந்தர வேலையாக ஆக்கப்படுகிறது. சட்ட திட்டங்களிலிருந்து தப்பிப்பதற்காக இந்த அய்.அய்.டி யில் விளம்பரத்தை வெளியிடுகிறார்கள். ஆனால், எந்த விளம்பரமும் சட்டநிலைக்கு முன் நிற்காது. ஏன் என்றால் வேலைவாய்ப்பிற்குரிய எல்லாச் செய்தி விபரங்களும் அதில் முற்றிலுமாகக் காண முடியாது. காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட காலியிடங்கள் போன்றவற்றை அந்த விளம்பரங்களில் காணமுடியாது.

மாணவர் சேர்க்கை:

ஆசிரியர் நியமனங்கள் போலவே மாணவர்கள் சேர்க்கையிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. முதன் முதலில் 1978 ஆம் ஆண்டில் தான் தலித் மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டைப் பற்றி யோசித்தார்கள். ஆனால் இந்த 22.5 சதவிகிதத்தைக் கூட முழுமையாக இங்கு நிரப்புவதில்லை. அதற்குப் பதிலாகக் கண்துடைப்பு வேலையான கட் ஆப் மார்க் முறையைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் அடிப்படை உரிமையான சமத்துவத்தை மீறும் விதத்தில் பி.டெக் பட்டப்படிப்பிற்குத் தேர்ச்சி பெறும் தலித் மாணவர்களை ஓராண்டு தயாரிப்பு வகுப்பில் சேர்த்து அதன் பிறகு தான் பி. டெக் படிப்பிற்கு அனுமதிக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அய்.அய்.டி.யில் இட ஒதுக்கீடே கிடையாது. இவர்களுக்கு என்று தேர்ச்சிக்குரிய விதிகளைக் குறைக்கவும் மாட்டார்கள். தகுதி என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களின் நியாயமான உரிமைகள் பறிக்கப்படுகின்றன. 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவிகிதம் அய்.அய்.டியில் இட ஒதுக்கீடு கூறி ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

என்.வி.சி. சாமியின் பதவிக் காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள்:

1995 ஆம் ஆண்டில் அய்.அய்.டியின் இயக்குநராக இருந்தவர் டாக்டர். என்.வி.சி. சாமி. ஏப்ரல் 1995இல் அவர் ஓய்வு பெற்றிருந்தாலும் கூட இயக்குநர் பதவியிலேயே 30 சூன் 1996 வரை நீடித்தார். எப்படியென்றால் தனது பதவிக்கால நியமனம் நீட்டிப்புப் பெற்றதாக பொய்க்காரணம் சொல்லி, அந்த நேரத்தில் அவர் 60 வயதுக்கு மேலாகவும் இருந்தார். ஒரு அய்.அய்.டியின் இயக்குநர் பதவி நியமனம் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் தான் நடைபெற முடியும். ஏனென்றால் அனைத்து அய்.அய். டிக்கும் விசிட்டர் என்பவர் குடியரசுத் தலைவரே. ஆனால் குடியரசுத் தலைவரின் அனுமதி இல்லாமலேயே அப்போதிருந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கல்விச் செயலாளர் ஒரு கடிதத்தின் மூலம் (DO Letter No. 12-17/95 TSI Dated Oct – 31, 1995) என்.வி.சி. சாமிக்கு மூன்று மாதக் காலம் நீட்டிப்பு கொடுத்தார். இதை எதிர்த்து சென்னை அய்.அய்.டியின் ஆசிரியர் சங்கம் உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. ரிட்மனு அனுமதிக்கப்பட்ட பின்னர் என்.வி.சி. சாமி ராஜினாமா செய்தார்.

80 ஆசிரியர்களின் நியமனம்:

சட்டத்திற்குப் புறம்பான விதத்தில் தான் இயக்குநராக இருந்த காலத்தில் டாக்டர். என்.வி.சி. சாமி அவசர அவசரமாக விளம்பரங்கள் வெளியிட்டு ஆசிரியர் பதவிகளை நிரப்பினார். மூன்றே மாதத்திற்குள் 80 உயர்சாதிக்காரர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டார்கள். இட ஒதுக்கீட்டுக் கொள்கை குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது.

தனக்கு விருப்பமான நபர்களைத் தேர்ச்சி செய்வதற்காகவே என்.வி.சி.சாமி வெளிவந்த விளம்பரங்களை மாற்றங்களுடன் மறுபடியும் வெளியிட்டார். உதாரணமாக கணிதத் துறையில் அசோசியேட் பேராசிரியர் பதவிக்கான விளம்பரத்தில், (No.IITM/R/8/94) தெளிவாகக் கூறியிருந்தது.

விண்ணப்பதாரருக்கு கணக்கில் அடிப்படை முதுகலைப் பட்டம் இருக்க வேண்டும் என்று இந்த விதிமுறையை ஒழுங்காகப் பின்பற்றியிருந்தால் ஒரே ஒரு உயர் சாதிக்காரர்கூட தேர்ச்சி பெற்றிருக்கமாட்டார். அதனால் அவருக்கு வேண்டியவரான முனைவர் எஸ்.ஜி. காமத்தை (இவர் பௌதிக பட்டதாரி) தேர்ச்சி செய்வதற்கு இந்த அடிப்படைத் தேர்வு விதிமுறையையே மாற்றினார்கள். இதற்கென்றே மறு விளம்பரம் ஒன்றை வெளியிட்டார்கள். (No. IITM/R/1/95) இதில் விதிமுறைகளைத் தளர்ச்சி செய்து கணிதத்தில் அடிப்படை பட்டம் தேவை என்பதை எடுத்துவிட்டார்கள். அந்த விளம்பரமும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்தே விண்ணப்பங்களைக் கேட்டது. ஆனால், இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற முனைவர் ஏ. ரெங்கன் என்பவர் அசோசியேட் பேராசிரியராக கணிதத்துறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பார்ப்பனர். அதேசமயம், முதல் வகுப்பில் வெற்றி பெற்று மிகவும் தகுதிவாய்ந்த பேராசிரியர் டாக்டர் வசந்தா கந்தசாமி பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த காரணத்தினால் தேர்ச்சி செய்யப்படவில்லை.

இடஒதுக்கீடு அமுல்படுத்தப்படவில்லை:

சென்னை அய்.அய்.டியின் 145 வது கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானம் 11/1994 வாயிலாக மனித வள மேம்பாட்டுத் துறையினுடைய கடிதத்தின் அடிப்படையில் (Dt. 01.11.1993) இடஒதுக்கீட்டை அய்.அய்.டியில் அமுல்படுத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. மேலும் (Department of Personnel & Training) அலுவலக ஆணை இடஒதுக்கீட்டைப் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு அரசு ஊழியர்களின் வேலைவாய்ப்பிலும் அய்.அய்.டி. போன்ற நிறுவனங்களுக்கும் இடஒதுக்கீடுகள் அமுல் செய்யக் கோரியது. டாக்டர். என்.வி.சி. சாமியின் 5 ஆண்டு பதவி காலத்தில் நடைபெற்ற அத்தனை ஆசிரியர் நியமனங்களிலும் அரசியல் சட்ட ஆணையான இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. இதை எதிர்த்து அய்.அய்.டி. பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச் சங்கத் தலைவர் கே.என். ஜோதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை (W.P.No. 5415/95) தாக்கல் செய்தார். இந்த ரிட் மனு தாக்கல் செய்த பின்பு உதவிப் பேராசிரியர், துணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பதவிகளுக்கான நியமன அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்கள். (Please note that the High Court of Madras by its order dated 17.4.1995 in W.M.P. No. 8893 in W.P. No. 5415 of 1995 has made the following order: the offer of appointment is subject to the result of the writ petition).

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அமுல்படுத்தப்படாததால் வன்னியர் சங்கமும் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இது போலவே மற்றொரு ரிட் மனுவும் (W.P.No.17403/95) தாக்கல் செய்யப்பட்டது.

ஃபெரா மீறல்கள் (Foreign Exchange Regulation Act) :

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடுவதாகச் சொல்லி அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் செய்தவர் என்.வி.சி.சாமி. இந்தப் பயணங்களின் போது அமைச்சகங்களிடமிருந்தோ ரிசர்வ் வங்கியிடமிருந்தோ இவர் ஒப்புதல் பெற்றுச் சென்றதே இல்லை. வெளிநாட்டில் வசிக்கும் அய்.அய்.டி.யின் முன்னாள் மாணவர்களிடமிருந்து டாலர்களில் நன்கொடை பெற்றார். ஆனால் இந்தப் பணத்தை அய்.அய்.டி.யின் கணக்கிலே வரவு வைக்கவில்லை. இவர் சேகரித்த பணம் பலகோடி என்று அய்.அய்.டி.யின் உள்ளேயே சொல்லப்படுகிறது.

தொடரும்