rasool hg

கடந்த 05.08.2017 அன்று கவிஞரும், எழுத்தாளரும், ஆய்வாளருமான ஹெச்.ஜி. ரசூல் மாரடைப்பால் காலமாகிவிட்டார் என்ற செய்தியை படைப்புலகத்தால் இன்னும் நம்பமுடியாததாகவே இருக்கிறது. அவருக்கு அகவை 60. தமிழ்நடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கன்னியாக்குமரி மாவட்டத் தலைவராகவும் இயங்கிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைப் பிறப்பிடமாகக்  கொண்ட அவர் படைப்பு வெளியில் அண்மைக் காலம் வரை மிகத் தீவிரமாக செயற்பட்டு வந்ததுடன் பன்முகத் தன்மை கொண்ட அவரது படைப்புகள் சகல உயிர்களின் மீதான நேசிப்பை, நுண்ணரசியல் வழி மெல்லிய எள்ளலுடனும் பேசக்கூடியவை.

     மதம் குறித்த அவரது பார்வையும் கூட அதை அடிப்படையாகக் கொண்டவையே இசுலாம் குறித்த மறுமலர்ச்சியையும், மீள் வாசிப்பையும் தொடர்ந்து அவரது படைப்புகள் வலியுறுத்தி வந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சனகனமன, மைலாஞ்சி, என் சிறகுகள், உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள் போன்றவை அவரது படைப்புகளில் சிலவாகும்

விடுதலை இறையியல் பேசும் காலத்தில் இறையியலில் விடுதலை பற்றிய அவரது பார்வையிலிருந்தே தாம் சார்ந்த மதத்தை அணுகினார்.

           ஆயிரம் நபிமார்கள் இருந்தும்

           ஏனில்லை வாப்பா

           ஒரு பெண் நபி?

     என்ற அவரது கவிதை வரிகள் போதுமானவை மதம் என்ற நிறுவனத்தின் மீதான அவரது எதிர்வினைக்கானப் பதிலை, உயிர்மையில் எழுதிய கட்டுரை ஒன்றுக்காக அவர் ஊர்விலக்கம் செய்யப்பட்டதன் வழி புரிந்து கொள்ள முடியும்.

     மைக்குட்டிகளுக்கு ஏன் இல்லை ஜனாசா தொழுகை?

என்ற அவரது மெல்லிய ஆனால் உறுதியான குரல் சகல உயிர்களின் சார்பிலானது. எல்லா மத நிறுவனங்களுக்கும், நிறுவனமயத்திற்கும் எதிரானது. ஹெச்.ஜி.ரசூல் என்ற மைக்குட்டியின் மரணம், நிறுவனமற்ற மதங்களையும், நேசிப்பையும் கோருவது. “என்னை அழைத்துச் சென்று பலியிடுங்கள்!” என்று அதனால்தான் அவரால் சொல்ல முடிகிறது. சொல்ல முடிந்தது.

- இரா.மோகன்ராஜன்

Pin It