மனம் கணக்கின்றது. ஒரு மானங்கெட்ட அரசு அரசாண்டால் என்ன நடக்குமோ, அது நடந்துவிட்டது. மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் உச்ச நீதி மன்றத்தின் படிகளை ஏறி, இறங்கிய அந்தச் சுமை தூக்கும் தொழிலாளியின் மகள் தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டாள். இதற்கு மேல் உயிர் வாழ்வதென்பது அருவருப்பான வாழ்க்கை என்பதை உணர்ந்த அந்த மாணவி, தன் உயிரைப் பலியாக கொடுத்துவிட்டு மீளாத துயரத்தில் நம்மை எல்லாம் ஆழ்த்திவிட்டு கண் மூடிவிட்டாள். இதை ஒரு சமூக நீதிப் போராட்டத்தின் நிரந்தரத் தோல்வி என்பதாகவோ, இல்லை அதற்காக தமிழகத்தில் பெரியாரால் நடத்தப்பட்ட புரட்சியின் தோல்வி என்பதாகவோ நம்மால் எடுத்துக் கொள்ள முடியாது என்றாலும், அப்படியான ஒன்று முன் நிகழ்வதற்கு ஏற்ற ஒரு நிகழ்தகவாக நாம் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். மரணத்தின் கதவுகள் கடும் நெருக்கடியில் எந்த வித வாய்ப்புகளும் அற்ற இருண்ட பிரதேசத்தில் தன் கோர நாவுகளை அனாமதேயமாகத் தொங்கவிட்டு தன்னை தின்று தீர்த்துக்கொள்கின்றது.

anitha ariyalur யாருக்கும் துன்பம் இழைக்க விரும்பாத மனம், யாரையும் துன்பத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று துடிக்கும் மனம், இன்று துடி துடிக்க பார்ப்பன சதியின் காரணமாக நம்மை எல்லாம் கதற வைத்துவிட்டு அய்யோ அம்மா என்று மாரடிக்க வைத்துவிட்டு ஓய்ந்து போயிருக்கின்றது. யாரைக் குற்றம் சொல்லி ஒப்பாரி வைத்து அழுவது என்று தெரியவில்லை. எவ்வளவு அடக்கினாலும் இந்தப் பாவி மனது உள்ளுக்குள் கதறுகின்றது. யாருக்காக நாம் போராடுகின்றோமோ, யாருக்காக நாம் அனுதினமும் உழைக்கின்றோமோ அவர்களே நம்மை ஏமாற்றி விட்டால் அந்தப் பிரிவின் வலி நம்மை சிந்திக்கவிடாமல் நிலை தடுமாற வைக்கின்றது.

 அவசரம், எல்லாவற்றிலும் அவசரம். உடனே கிடைத்துவிட வேண்டும் என்ற அவசரம். போராடுவதற்கும், அந்தப் போராட்டம் தோல்வியுறும் போது அதில் இருந்து மீண்டு படிப்பினைகளைக் கற்றுக்கொண்டு, மீண்டும் போராட்டத்தைச் செழுமைப்படுத்தி அதில் வெற்றி காண்பதற்கும் ஏற்ற மனமில்லாமல் உடனே சாதித்துவிட வேண்டும் என்ற அவசரம். ஆனால் அவசரத்துக்கு ஏற்றபடி ஆடும் அரசையா நாம் பெற்றிருக்கின்றோம்?

 இது மானங்கெட்டவர்களின் அரசு, பொறுக்கித்தின்னும் புறம்போக்குகளின் அரசு, பணத்துக்காக யாரை வேண்டும் என்றாலும் கூட்டிக்கொடுக்கும் அரசு, அப்படிப்பட்ட அரசில் நீ அவசரப்பட்டது மிகத் தப்பானது என் சகோதரி. உன் புரிதல் மிக எளிதாக இருந்துள்ளது. நீ போராட களம் இறங்கியது சாமானிய எளிய மனிதர்களுக்கு எதிராக அல்ல, அவர்கள் உயிருடன் இரத்தம் குடிக்கும் காட்டேரிகள். சமாதிகளில் தோண்டிய எலும்புத்துண்டுகளைப் பொறுக்கி எடுத்து, பச்சை குழந்தைகளின் மண்டை ஓடுகளை வைத்து மந்திரம் செய்யும் மாயாவிகள். அவர்களிடம் இருந்து உடனடியான தீர்வை நீ எதிர்பார்த்தது தவறில்லையா?

 இப்போது யாருக்கு இழப்பு? உன்னுடைய கனவுகளை நாங்கள் எப்படி நிறைவேற்றுவோம்? எங்களின் கண்ணீரும் கதறலும் தான் உனக்கு அதிகபட்சமாக செய்ய முடிந்த தர்ப்பணம். நாங்கள் கோழைகள். எங்களால் நாய்களைப் போல குரைக்க முடியும், வாலைக்கூட ஆட்ட முடியும். ஆனால் கடிப்பதற்கான அங்கீகாரம் எப்போதுமே எங்களிடம் இல்லை. எங்களது பற்கள் நாங்கள் வளரும் போதே பிடுங்கப்பட்டுவிட்டன. இப்போது நீ பார்ப்பதெல்லாம் ஒட்டுப் பற்களைத்தான். அதைத்தான் நாங்கள் உண்மையான பற்கள் என்று இத்தனை நாட்களாக உன்னையும் உன்னைச் சேர்ந்தவர்களையும் நம்ப வைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் எங்கள் புரட்சியின் வீர முழக்கத்தை உண்மை என்று நம்பிய நீ, அதன் படியே உன் வாழ்க்கையை ஒரு புரட்சிகர லட்சியத்துக்காக துறந்துவிட்டாய்.

 சகோதரி, நாம் நினைத்ததெல்லாம் அடுத்த நொடியே நடத்திக் காட்டும் லட்சிய சமூகத்தில் நாம் வாழவில்லை என்பதை நீ அறியாமல் விட்டுவிட்டாய். இங்கே கனவுகளை சமரசம் செய்துகொள்ளுதல் என்பது பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள தவிர்க்க முடியாத மாபெரும் வியாதி. நீ அப்படித்தான் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். நீ வாழ்வது, முழுவதும் வர்த்தகம் ஆக்கப்பட்ட சமூகத்தில். இப்போதெல்லாம் புரட்சி நடக்க வேண்டும் என்றால் கூட நாம் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

 அப்படிப்பட்ட உலகத்தில் நீ எந்த வித சப்ஸ்கிரைப்பும் செய்யாமல், உனக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டது அநியாயம் தோழி. அதற்குக் குறைந்த பட்சம் நீ சில நூறுகள் முதல் சில லட்சங்கள் வரை முதலீடு செய்திருக்க வேண்டும். அப்படி செய்யத் திராணியற்ற உனக்கு எப்படி மருத்துவர் கனவுகள் எல்லாம் வந்தது என்றே தெரியவில்லை. பேசாமல் உன் குலத்தொழில் என்னவோ, அதை நீ பார்த்துக் கொண்டிருந்தால் உயிரோடு கூட நீ இருந்துகொண்டு இருந்திருப்பாய். பார்ப்பனியமும் அதைத்தான் எப்போதுமே விரும்பி வந்திருக்கின்றது. உன்னை நாங்கள் தான் ஆசை காட்டி கொன்றுவிட்டோம். எப்படியும் இந்தக் கோழைகளை அச்சுறுத்தி விலக்கு பெற்றுவிடலாம் என்ற எங்கள் கனவுகள் மழை நீரில் கரைந்துசென்ற வானவில்லைப்போல கரைந்து சென்றன.

 இனி நீட் தேர்வில் நீ வெற்றி பெற்றிருந்தால் கூட அடைய முடியாத உயரத்துக்கு உன்னை எங்கள் ஊடக மாமாக்கள் எடுத்துச் செல்வார்கள். அவர்களைப் பொருத்தவரை ஒரு கொசு இறந்தால் கூட அது பிரேக்கிங் நியூஸ்தான். கொசுவுக்கே அப்படி என்றால், உன்னை கேட்கவே வேண்டாம். யார் யாரெல்லாம் உன்னை காலம் காலமாக ஓட, ஓட விரட்டி விரட்டி அடித்தார்களோ இப்போது அவர்களே உனக்காக கண்ணீர்விடுவதாக சொல்கின்றார்கள். அதை எந்தவித விமர்சனமும் இன்றி நம் பொதுச்சமூகத்தின் அற்ப மனது ஏற்றுக் கொள்கின்றது. அவர்களுக்கு யார் யோக்கியமானவர்கள் என்பதைப் பற்றியோ, இல்லை யார் போராடி நிச்சயம் வாங்கித் தருவார்கள் என்பதைப் பற்றியோ எந்தப் பிரக்ஞையும் இல்லை.

 மரணம் எல்லாவற்றுக்கும் தீர்வு என்று சொல்லிக் கொள்கின்றது. ஆனால் மரணம் எல்லாவற்றையும் மறுபடியும் புதிதாக தொடங்கி வைப்பதை மரணம் எப்போதுமே உணர்வதில்லை. அது தன்னுடைய பணி முடிந்தவுடன் இந்த உலகம் அழிந்துவிடும் என்றோ, இல்லை தீர்ந்துவிடும் என்றோ கற்பனை செய்து கொள்கின்றது. ஆனால் ஒவ்வொரு மரணத்திற்குப் பின்னும் இந்த உலகம் தனது உயிர்ப்பான கதைகளை தொடர்ந்து எழுதிக்கொண்டே தான் செல்கின்றது. அதில் மரணமுற்றவர்களின் வாழ்க்கையும் நிச்சயம் இடம் பெற்றுக்கொண்டே தான் இருக்கின்றது. மரணம் எதற்காக நிகழ்ந்ததோ அந்தக் காரணம் தீர்க்கப்படாமல் இருக்கும் வரை எந்த ஒரு போராட்டமும், புரட்சியும் தன் போக்கில் பின்வாங்குவதில்லை. அது ஒரு வேட்டை நாய் போல தன் எதிரிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. வசமாக மாட்டும் போது மரணத்திற்குக் காரணமானவர்களை வேட்டை நாய்களுக்கு தீனியாகப் போட அது ஒருபோதும் தயங்குவதில்லை.மேலும் போராட்டத்தில் தன் இன்னுயிரை ஈந்தவர்களுக்கு மரணமில்லா பெருவாழ்வோ, இல்லை குறைந்தபட்டம் நீட் தேர்வில் இருந்து விலக்கோ கூட கிடைக்கும் என்றும் நாம் உறுதியாக நம்புகின்றோம்.

-          செ.கார்கி

Pin It