ருத்துவ நுழைவுத் தேர்வே கொடுமை என எல்லாரும் புலம்பிக் கொண்டிருக்க, அது நடத்தப்பட்டுள்ள விதம் அதை விடக் கொடுமையாக இருக்கிறது!

நீட் தேர்வு எழுதப் போன மாணவர்கள் ஆடைக் கட்டுப்பாடு காரணமாகத் தேர்வு வளாக வாசலிலேயே சட்டையைக் கிழித்துக் கொடுத்து விட்டுக் கந்தல்கோலமாகப் போனதைப் பார்த்தோம். இதன் உச்சக்கட்டமாக, கேரளத்தில் மாணவி ஒருவர் சோதனையின் பெயரால் தன் உள்ளாடையைக் கழற்றும்படி பணிக்கப்பட்டிருக்கிறார்! தேர்வு எழுத உள்ளே சென்ற அவர் திரும்பி வந்து தாயிடம் தன் மேல் உள்ளாடையைக் கொடுத்து விட்டுத் திரும்பிச் சென்றிருக்கிறார்!

neet exam

எப்பேர்ப்பட்ட நாகரிகம் பார்த்தீர்களா! இதை விடச் சிறப்பான ஒரு தேர்வுமுறை உலகின் வேறு எந்த நாட்டிலாவது இருக்க முடியுமா? இதை விட மரியாதையாக ஒரு நாடு தன் மக்களை நடத்தத்தான் முடியுமா?

ஆனால், நம் பா.ஜ.க., பெருமக்களின் பேச்சுத் திறமைக்கு முன் இவையெல்லாம் பெரிய பிரச்சினையே இல்லை. “அரசா அப்படி நடக்கச் சொன்னது? தேர்வுப் பரிசோதகர்களில் யாரோ சிலர் செய்த தவற்றுக்கு அரசை எப்படிக் குற்றம் சொல்லலாம்?” என்பார்கள் அவர்கள் இப்பொழுதும்.

அட அறிவார்ந்த பெருமக்களே! ஆடையில் பெரிய பொத்தான்கள் இருக்கக்கூடாது என்கிற வரைக்கும் தீவிரமான நெறிமுறைகள் வகுத்துக் கொடுத்து அவ்வளவு கறாராக இந்தத் தேர்வை நடத்தச் சொன்னது யார்? அந்த அளவுக்குக் கடுமையான முறையை இந்தத் தேர்வில் கடைப்பிடிக்கச் சொன்னதுதானே இப்படி ஒரு நிகழ்வு நடக்கக் காரணம்? எனில், அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியது யார்? பாகிஸ்தான் அரசா?

நடந்த இந்தத் தேர்வில், படிக்கிற மாணவர்கள் சோதனை எனும் பெயரால் தீவிரவாதிகளைப் போல ஆய்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்! அடிமைகளைப் போல் நடத்தப்பட்டிருக்கிறார்கள்! பெண்கள் உளவியல் அளவில் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்! முதல் முறை நடத்திய தேர்விலேயே நாட்டையே தலைக்குனிய வைத்து விட்ட இந்தப் புதிய முறைதான் ஈடு இணையற்ற மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தி விடப் போகிறது; உளவியல் அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருங்கால மருத்துவர்களையே மனநோயாளியாக்கி விடக்கூடிய இந்தக் கல்விக் கொள்கைதான் நோயற்ற பாரதத்தைப் படைத்து விடப் போகிறது எனவெல்லாம் இந்த பா.ஜ.க., மாண்புமிகுக்கள் கூறுவதை நாம் இன்னும் நம்பினால் நம்மை விடப் பித்துக்குளிகள் வேறு யாரும் இருக்க முடியாது.

நீங்கள் கேட்கலாம், “தேர்வு நடத்தப்பட்ட விதம் தவறு என்பதற்காக இந்தத் தேர்வே தவறு என எப்படிச் சொல்ல முடியும்?” என்று.

சரி, இதை விடுங்கள்! மருத்துவப் படிப்புக்கான இந்தப் பொதுநுழைவுத் தேர்வினால் என்னவெல்லாம் கெடுதிகள் ஏற்படும் எனக் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அறிஞர் பெருமக்கள் எனப் பலரும் பக்கம் பக்கமாகப் பட்டியலிடுகிறார்களே! அவற்றுக்கு என்ன பதில்? கல்வியாளர்கள் தவறு எனச் சொல்ல சொல்ல மதிக்காமல் ஓர் அரசு கல்வித்துறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்றால், அப்படிப்பட்ட அரசின் நோக்கம்தான் என்ன? சிந்திக்க வேண்டாவா? மருத்துவப் படிப்புக்குப் பொதுநுழைவுத் தேர்வு கொண்டு வந்தால்,

  • ஏழைகளுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனியாகும்
  • ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களின் மருத்துவக் கல்விக் கனவு நிறைவேறாமல் போகும்
  • தாய்மொழி வழியில் படித்தவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியாமல் போகும்
  • நடுவணரசுப் பாடத் திட்டத்தைத் (CBSE) தவிர மற்ற பாடத்திட்டங்களில் படித்தவர்கள் மருத்துவம் பயில முடியாத நிலை உருவாகும்
  • மருத்துவக் கல்வி பற்றித் தீர்மானிக்கும் அதிகாரம் இதனால் முழுக்க முழுக்க நடுவணரசின் கைக்குப் போவதால் பட்ட மேற்படிப்புப் படிக்கும் மருத்துவர்கள் குறிப்பிட்ட ஆண்டுக் காலம் அரசுப் பணி புரிய வேண்டும் என்பது போன்ற மாநில அரசின் கட்டுப்பாடுகள் தளர்ந்து வெளிநாடுகளுக்குப் பறக்கும் மருத்துவர் எண்ணிக்கை உயரும்

எனவெல்லாம் பெரிய பெரிய குண்டுகளைத் தூக்கிப் போடுகிறார்கள் கல்வியாளர்கள். ஆனால், இவற்றில் எதற்குமே வாய் திறக்காமல் “நான் நுழைவுத்தேர்வு வைக்கத்தான் செய்வேன். முடிந்தால் எழுது! இல்லாவிட்டால் போ!” எனச் சொல்லாமல் சொல்கிறது அரசு.

பொதுமக்களான நாமும் ‘தேசியமய அடிப்படையிலான எல்லாத் திட்டங்களையுமே தமிழ்நாட்டினர் எதிர்க்கின்றனர். அதன் ஒரு பகுதிதான் இதுவும்’ என நினைக்கிறோம். நம்மைப் பொறுத்த வரை, தேசிய அளவிலான எல்லா முயற்சிகளும் சரியானவை. மாநில அளவிலான எல்லாச் சிந்தனைகளும் குறுகிய மனப்பான்மை!

நான் பெரிய கல்வியாளனோ, சிந்தனைச் சிற்பியோ இல்லை. எனவே, நீட் தேர்வு சரியா தவறா எனக் கருத்துக் கூறும் தகுதி எனக்குக் கிடையாது. ஆனால், சமூகத்தின் மீது அக்கறையுள்ளவன் எனும் தகுதியின்பால், இந்நுழைவுத் தேர்வை வலியுறுத்தும் அரசிடமும் மக்களிடமும் ஒரே ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன்.

நீங்கள் எல்லாரும் கூறுகிறபடி, மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு நல்லது என்பதாகவே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். ஆனால், மருத்துவக் கல்விக்குள் நுழைய ஏற்கெனவே இருக்கும் படிநிலைகள் போதாதென இப்படிப் புதிதாக மேலும் படிநிலைகளைக் கொண்டு வருகிற அளவுக்கு நம் நாட்டில் அடிப்படை மருத்துவக் கட்டமைப்பு (Basic Medical Status) உயர்ந்திருக்கிறதா? இதுதான் என் கேள்வி!

இது என்ன கேள்வி? நாட்டின் அடிப்படை மருத்துவக் கட்டமைப்புக்கும் மருத்துவக் கல்விக்கான பொதுநுழைவுத் தேர்வுக்கும் என்ன தொடர்பு எனக் கேட்கிறீர்களா? சொல்கிறேன்.

எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கையே 80 விழுக்காட்டுக்கும் மேல் என வைத்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட நாட்டில் ஆசிரியர் பணியிடத்துக்கு ஆட்களை எப்படித் தெரிவு செய்வார்கள்? பட்டப் படிப்பு முடித்திருக்கிறாரா, முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறாரா எனவெல்லாமா பார்ப்பார்கள்? இல்லை! குறைந்தது பள்ளிக் கல்வி முடித்தவராக இருந்தால் கூடப் போதும் ஆசிரியராகி விடலாம் என்பதாகத்தான் தகுதி வரையறையை வைத்திருப்பார்கள். மாறாக பட்டப் படிப்பு, பல்கலைக்கழகச் சான்றிதழ், முன் அனுபவம் என ஆயிரத்தெட்டுத் தகுதிகள் இருந்தால்தான் கல்வித்துறையிலேயே நுழைய முடியும் என வைத்தால் அந்நாடு என்னாகும்? நினைத்துப் பாருங்கள்!

அப்படித்தான் இதுவும். இந்தியாவின் இன்றைய மக்கள்தொகை 134 கோடி! ஒரு நாட்டில் இத்தனை பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என ஓர் அடிப்படைக் கணக்கு இருக்கிறது. அத்தனை மருத்துவர்கள் இங்கு இருக்கிறார்களா என்பது அப்புறம். முதலில் இத்தனை கோடிப் பேருக்குத் தேவையான மருத்துவமனைகள் இருக்கின்றனவா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!

“பொதுமக்களின் உடல்நலம் தொடர்பாகப் பல்வேறு சவால்களை இந்தியா சந்திக்க வேண்டியிருக்கிறது” என்று உலக நல்வாழ்வு நிறுவனம் (WHO) வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. ஏப்ரல் 2015-இல் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையின் முதல் வரியே என்ன தெரியுமா? “உலகின் மொத்த நோய்ச் சுமையில் 21 விழுக்காட்டை இந்தியாதான் சுமக்கிறது” என்பதுதான். “உலகிலேயே பேறுகால இறப்பு, குழந்தைகள் இறப்பு, பச்சிளம் குழந்தை (newborn) இறப்பு ஆகியவற்றில் இந்தியாதான் உச்சத்தில் இருக்கிறது என்பது இதை விடத் திகைப்பான அடுத்த வரி! (சுருக்க அறிக்கையின் முழு வடிவம் இங்கே!).

அவ்வளவு ஏன், கடந்த ஆண்டு இந்திய மருத்துவ ஆணையம் (Medical Council of India) வெளியிட்டுள்ள அறிக்கையே, “இந்தியாவில் 1674 நோயாளிகளுக்கு ஒரே ஒரு மருத்துவர்தான் இருக்கிறார்” என்கிறது. (பார்க்க: இந்தியா டுடே). இந்தியாவில் போதிய அளவில் மருத்துவர்கள் இல்லை என்பதற்கு இதை விடச் சான்று தேவையா?

இப்படிப்பட்ட ஒரு நாட்டில், மருத்துவம் படிக்க மேலும் மேலும் படிநிலைகளைக் கூட்டிக் கொண்டே போவது முட்டாள்தனம் இல்லையா? பள்ளி இறுதி வகுப்புத் தேர்ச்சி பெற்றால் போதாது, அதில் பெற்றிருக்கும் தகைவு மதிப்பெண் (cut off mark) போதாது, கூடுதலாக நுழைவுத்தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என்கிறார்களே, இதை விடக் கிறுக்குத்தனம் உண்டா? மருத்துவப் படிப்புக்கு இத்தனை படிநிலைகள் வைத்து வடிகட்டி மாணவர்களைத் தேர்வு செய்யும் அளவுக்கா இந்நாட்டில் மருத்துவர் எண்ணிக்கை உயர்ந்து கிடக்கிறது? கொஞ்சமாவது சிந்திக்க வேண்டா?

அட, இந்தப் புள்ளிவிவரங்கள், துறைசார்ந்த அறிக்கைகள் போன்றவற்றையெல்லாம் கூட விட்டுத் தள்ளுங்கள்! இன்னும் எளிமையாகப் பார்ப்போம்.

இத்தனை காலமாக ஏழைகள், பணக்காரர்கள், ஒடுக்கப்பட்ட சாதியினர், உயர்த்தப்பட்ட வகுப்பினர், தாய்மொழி வழியில் படித்தவர்கள், மாநிலக் கல்வியில் பயின்றவர்கள் என இத்தனை பிரிவுகளிலிருந்தும் மருத்துவர்கள் உருவாகி வந்தே நாட்டின் நல்வாழ்வு நிலைமை (Health Status) இப்படிக் கிடக்கிறதே, இன்னும் பணக்காரர்களும் நடுவணரசுப் பள்ளியில் படித்தவர்களும் மட்டும்தாம் மருத்துவராக முடியும் எனும் நிலைமையை உண்டாக்கும் இந்த மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு முறை வேறு அமல்படுத்தப்பட்டால் நம் நிலைமை என்னாகும்? அதைச் சிந்தித்தீர்களா? அவசரத்துக்கு ஒரு மருத்துவர் கிடைப்பாரா? மருத்துவக் கல்வி எட்டாக்கனியாவது கிடக்கட்டும், மருத்துவமே எட்டாக்கனியாகி விடாதா?

நுழைவுத் தேர்வு மூலம்தான் தரமான மருத்துவர்களை ஆளாக்க முடியும் எனப் பிதற்றுபவர்களே! குப்பை வண்டித் தொழிலாளிக்கு ஊசி குத்துபவர் முதல் குடியரசுத் தலைவரின் நாடி பிடிப்பவர் வரை நாட்டில் இன்றுள்ள இத்தனை ஆயிரம் மருத்துவர்களுமே நுழைவுத் தேர்வு இல்லாமல் வந்தவர்கள்தாமே? மாநிலக் கல்வித்திட்டத்தில் பெற்ற தேர்ச்சியையும் மதிப்பெண்களையும் மட்டுமே தகுதியாகக் கொண்டு மருத்துவ அங்கியை அணிந்தவர்கள்தாமே? இவர்கள் எல்லோருமே தகுதியற்றவர்களா? இது நாட்டிலுள்ள அத்தனை மருத்துவர்களையும் இழிவுபடுத்துகிற கருத்தில்லையா? ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் இடம்பெற்ற சில உரையாடல்களே உங்களை இழிவுபடுத்தி விட்டதாகக் கொந்தளித்த மருத்துவர்களே! இப்பொழுது உங்கள் காதுகள் எந்த அடகுக் கடையில் இருக்கின்றன?

தரம், தகுதி எனக் கூப்பாடு போடுபவர்களே! எது தரம்? எது தகுதி? ஏழை எளியவர்கள், தாய்மொழி வழியில் படிப்பவர்கள், மாநிலக் கல்வித்திட்டத்தில் பயில்பவர்கள், இட ஒதுக்கீட்டின் மூலம் வருபவர்கள் போன்றோரெல்லாம் தரமான மருத்துவர்களாக மிளிர முடியாதா? எனில், இப்படிப்பட்ட பிரிவுகளிலிருந்து வந்த மருத்துவர்களையே பெருவாரியாகக் கொண்ட தமிழ்நாட்டின் சென்னை மாநகரம் எப்படி இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாக உருவானது? உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் இங்கு வந்து மருத்துவம் பார்த்துச் செல்கிறார்களே எப்படி?

ஆக, மாநில அடிப்படையிலான சிந்தனையோ, தேசிய அளவிலான பார்வையோ, தகுதியோ தரமோ எப்படிப் பார்த்தாலும் இந்த மருத்துவப் பொதுநுழைவுத் தேர்வு மாணவர்களுக்கு மக்களுக்கு நாட்டுக்கு என அனைவருக்கும் அத்தனை வகையிலும் தீங்கானதுதான் என்பதே உறுதியான உண்மை!

எனவே, அரசியலாளர்களின் வா(மா)ய்மாலங்களுக்கு இரையாகாமல் இனியாவது துறைசார் வல்லுநர்களின் கருத்துக்களுக்குக் காது கொடுப்போம்! உருப்படுகிற வழியைப் பார்ப்போம்!

உசாத்துணை: வளரும் கவிதை வலைப்பூ, விக்கிப்பீடியா.

கலைச்சொற்கள்: நன்றி அகரமுதல, விக்சனரி.

- இ.பு.ஞானப்பிரகாசன்